இந்தியாவின் சிபிஐ என்ற மத்தியப் புலனாய்வுத்துறை மலேசிய செல்வந்தரும் மாக்ஸிஸ் உரிமையாளருமான டி ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிராக சமர்பித்துள்ள வழக்கு மலேசியத் தொலைத் தொடர்புத் துறை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தகவல், பண்பாடு தொடர்பு துணை அமைச்சர் ஜோசப் சாலாங் கூறுகிறார்.
அந்தச் செல்வந்தருக்கு எதிராக எந்த புலனாய்வையும் மலேசிய அதிகாரிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என்றார் அவர்.
“இப்போதைக்கு அது இந்தியாவின் சிபிஐ நடத்தும் விசாரணை மட்டுமே. நாம் நமது தொலைத் தொடர்புத் தொழிலை வெளிப்படையாக நடத்துவதால் மலேசியத் தரப்பில் எந்த புலனாய்வும் இருக்காது”, என சாலாங் சொன்னார்.
தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் சார்பில் “2011ம் ஆண்டுக்கான தொடர்பு இணைப்பு எதிர்காலம்” என்னும் கருத்தரங்கை அவர் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
தேசிய அகல அலைக்கற்றை திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள மொத்த வீடுகளில் 61.5 விழுக்காடு வீடுகளுக்கு அகல அலைக்கற்றை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட உரையில் ராயிஸ் கூறினார்.
அந்த விகிதத்தை 2015ம் ஆண்டு இறுதிக்குள் 75 விழுக்காடாக உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவதற்கு இன்னும் பல சவால்களைச் சமாளிக்க வேண்டிருப்பதகாவும் ராயிஸ் குறிப்பிட்டார்.
“சந்தையில் போட்டி அதிகரித்துள்ளதால் எதிர்காலத்தில் அகல அலைக்கற்றை வருமானம் மீது உறுதியற்ற சூழ்நிலை நிலவுவதும் அவற்றில் ஒன்றாகும்”, என்றார் அவர்.
என்றாலும் இலக்கவியல் உலகம் மேம்பாடு காண்பதால் நாமும் அதற்கு ஏற்ப முன்னேற வேண்டும். அகல அலைக்கற்றை நோக்கத்தை அடையத் தொடர்ந்து பாடுபட வேண்டும்.”
அரசாங்கம் தொலைத் தொடர்புத் துறையின் நீண்ட கால நிலைத்தன்மையையும் திறமையையும் உறுதி செய்யும் அதே வேளையில் பயனீட்டாளர்களுடைய நலன்களையும் பாதுகாக்க சம நிலையான அணுகுமுறையை நாடும்.
பெர்னாமா