அரசமைப்பு சட்டவல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர்டின் விடுத்துள்ள சவாலை ஏற்று அவருடன் வாதமிட தயார் என்று கூறியுள்ளார். ஆனால் சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனை கைவிடப்பட வேண்டும் என்றாரவர்.
“அவர் நேர்மையானவராக இருந்தால் இந்த நிபந்தனையின்றி வரட்டும். தாக்குதலை முதலில் தொடுத்தவர் அவர்தான். நியாயமானவராக இருந்தால் தேவையற்ற நிபந்தனைகளைப் போடாமல் வாதமிட முன்வர வேண்டும்”, என்று அப்துல் அசீஸ் கூறினார்.
“நான் தப்பே செய்யவில்லை என்று நினைக்கிறபோது எதற்காக சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனை?
“எதற்காக என்னை மன்னிப்பு கேட்கும்படி கூறுகிறார்? சுல்தான் உள்பட வேறு யாரையும் இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம்”,என்றவர் கேட்டுக்கொண்டார்.
யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா சட்டவிரிவுரையாளர் அப்துல் அசீஸைக் குறை சொல்லும் கூட்டத்துடன் நேற்று சுல்கிப்ளியும் சேர்ந்துகொண்டார்.
அரசமைப்பு விவகாரங்கள் தொடர்பில் சட்ட வல்லுனருடன் வாதமிட சுல்கிப்ளி தயாராக இருப்பதாய் மலாய் நாளேடுகளான பெரித்தா ஹரியானும் உத்துசானும் அறிவித்திருந்தன.
ஆனால், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுல்கிப்ளி, வாதத்தில் ஈடுபடுமுன்னர், சிலாங்கூர் சுல்தான் ஆகஸ்ட் 3-இல் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கைமீது விமர்சனம் செய்ததற்காக அப்துல் அசீஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
“அவர் எங்கு விரும்புகிறாரோ அங்கு சென்று வாதமிட நான் தயார். ஆனால், முதலில் அவர் சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சுல்தானின் கட்டளையை அவர் விமர்சனம் செய்திருந்திருந்ததை மரியாதைக்குறைவான செயலாக பலரும் கருதுகிறார்கள்”, என்று அவர் கூறியதாக உத்துசான் அறிவித்திருந்தது.
அப்துல் அசீஸ் விரிவுரையாளர் பதவியிலிருந்து விலகி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தயாரா என்றும் சுல்கிப்ளி சவால் விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த பேராசிரியர் இது ஒரு பொருத்தமான சவால்தானா என்று வினவினார். தமது கல்வித்துறை அல்லது அரசியல் ஈடுபாட்டுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்புமில்லையே என்றாரவர்.
“நான் சுல்தானை அவமதித்து விட்டேன், அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டேன் என்பதுதானே அவர் என்மீது சாட்டும் குற்றச்சாட்டு, அதன்மீதுதானே விவாதம் நடத்த வேண்டும்”, என்று அப்துல் அசீஸ் கூறினார்.
அப்துல் அசீஸ் பதவிவிலக வேண்டும் என்று கூறப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த வாரம் செனட்டர் எசாம் முகம்மட் நூரும் இதேபோன்ற சவால் ஒன்றை விடுத்திருந்தார்.
முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவரான எசாம், அப்துல் அசீஸ் நடுநிலையானவர் அல்ல என்றும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் தொடர்புள்ள ஒரு கல்விக்கழகத்துக்கு ஒரு நூலை எழுதிக்கொடுத்து அதற்காக உரிமத்தொகையையும் அவர் பெற்றுக் கொண்டதற்கு “ஆதாரம்” இருப்பதாகவும் கூறியதாக பெரித்தா ஹரியான் கூறியது.
“பெரும் பணத்தை உரிமத்தொகையாக பெற்றுள்ளார். அது எவ்வளவு என்பதை (அப்துல்) அசீஸ் அறிவிக்க வேண்டும்”, என்று எசாம் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
இதற்குப் பதிலளித்த அப்துல் அசீஸ், நூல்களுக்கு உரிமத்தொகை வழங்குவது “வழக்கமான” ஒன்றுதானே என்றார்.
“அது ஒன்றும் கமிஷனோ கையூட்டோ அல்லவே. எஸ்சாமா இப்படிச் சொன்னார்? என்னைக் கேட்டால் அவர் வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தலாம் என்பேன்”, என்று கூறிய அசீஸ், எதற்காக அரசியல்வாதிகள் தம்மீது பாய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
“அவர்களை நான் தாக்கிப்பேசியதே இல்லை. எதற்காக எல்லாரும் என்மீது ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள்?”
இவ்விவகாரம் தொடர்பில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அவர்மீது விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரிவுரையாளர், இவ்விவகாரம் தொடர்பில் அறிக்கைகள் வெளியிட்டிருக்கும் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.