மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பாஸ் பங்கு கொள்ளாது

ஷா அலாம் வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பாஸ் பங்கு கொள்ளாது. காரணம் அரசியல் கட்சிகள் அந்த நிகழ்வில் சம்பந்தப்படவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகும்.

“அந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் ஏதும் சம்பந்தப்படவில்லை என பாஸ் கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஏற்பாட்டாளர்களுடைய விருப்பங்களை மதிக்கும் வகையில் அந்தப் பேரணியில் பங்கு கொள்வதில்லை என பாஸ் முடிவு செய்துள்ளது,” என அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்றிரவு கூறினார்.

அதற்கு முன்னர், முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணி ஒன்று ஏற்பாடு செய்துள்ள ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணி குறித்து பாஸ் கட்சியின் அரசியல் பிரிவு விவாதித்தது. அதனை அடுத்து வெளியிடப்பட்ட அறிக்கை பாஸ் கட்சியின் முடிவைத் தெரிவித்தது.

அந்தப் பிரச்னை தொடர்பில் பாஸ் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியிருந்தது. இஸ்லாமியக் கட்சி என்னும் முறையில் பேரணியை அது ஆதரிக்கவில்லை என்னும் தோற்றத்தையும் தர முடியாது. அதே வேளையில் பங்கு கொண்டால் அது ஒரு தீவிரவாதக் கட்சி என முஸ்லிம் அல்லாத வாக்காளர்களிடையே போட்டிக் கட்சியான அம்னோவால் அது சித்தரிக்கப்படக் கூடிய  அபாயத்தையும் எதிர்நோக்கியது.

அந்த நிகழ்வு அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையது எனக் கூறப்படுவதை அதன் முக்கிய ஏற்பாட்டாளரான முகமட் அஸ்மி அப்துல் ஹமீட் நேற்று மறுத்திருந்தார்.

அந்த நிகழ்வில் தாம் பேசப் போவதாக கூறியுள்ள கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டின் உட்பட சர்ச்சைக்குரிய பல அரசியல்வாதிகளுக்கும் அந்த நிகழ்வுக்கும் எந்தத்  தொடர்பும் இல்லை என முகமட் அஸ்மி தெளிவுபடுத்தினார்.

“பேரணி தலைமைத்துவத்தில் சுல்கிப்லியோ, செனட்டர் எஸாம் முகமட் நூரோ, பாசிர் மாஸ் எம்பி இப்ராஹிம் அலியோ சம்பந்தப்படவில்லை. அவர்கள் அந்த நிகழ்வில் உரையாற்றப் போவதுமில்லை.”

“அந்தப் பேரணி தொடர்பாக அவர்கள் விடுக்கும் எந்த அறிக்கையும் ஏற்பாட்டாளர்களுடன் சம்பந்தப்பட்டது அல்ல,” என்றார் முகமட் அஸ்மி.
 
முஸ்லிம்களைக் கிறிஸ்துவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் அதிகரித்து வருவதாக கூறிக் கொள்ளப்படுவதைத் தொடர்ந்து அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.