பர்மியக் கைதிகள் பரிவர்த்தனை நாட்டின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும்

பர்மியக் கைதிகளை திருப்பி அனுப்பும் அரசாங்கத் திட்டம் மலேசியாவின் மனித உரிமை பதிவுகளுக்கு மேலும் காயத்தை ஏற்படுத்தும் என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான சுவாராம் எச்சரித்துள்ளது.

அந்த திட்டம் பர்மிய இராணுவ ஆட்சி மன்றத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான ஒர் அங்கீகாரமாகக் கருதப்படலாம் என சுவாராம் அகதிகள் ஒருங்கிணைப்பாளர் அண்டிக்கா அப்துல் வஹாப் கூறினார்.

“பர்மிய அரசாங்கத்துடன் இரு தரப்பு ஏற்பாட்டை செய்து கொள்வதின் மூலம் மலேசிய அரசாங்கம் ஜனநாயகத்துக்கு புறம்பான கொடுங்கோல் ஆட்சிக்கு கூடுதல் அங்கீகாரம் கொடுக்கிறது”,என அவர் சொன்னார்.

ஆசியான் அமைப்பைத் தோற்றுவித்த நாடு என்ற முறையிலும் ஐநா மனித உரிமை மன்றத்தின் உறுப்பினர் என்ற முறையிலும் மலேசியா, ஒர் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். அந்தக் கைதிகளைத் திருப்பி அனுப்புவதின் மூலம் அவர்களுக்கு ஆபத்தை மலேசியா ஏற்படுத்தக் கூடாது என்றார் அவர்.

பர்மிய இராணுவ ஆட்சி மன்றம் உருவாக்கிய உள்நாட்டுப் பூசல்களினால், ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்பாலும் சிறுபான்மை இன மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அனைத்துலகப் பாதுகாப்பை நாடியுள்ளனர்

பர்மாவில் அரசாங்க எதிர்ப்பாளர்களும் சிறுபான்மை இனங்களைச் சார்ந்தவர்களும் ஒடுக்கப்பட்டு கொத்தடிமைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அண்டிக்கார் சொன்னார்.

“மலேசியாவில் பல உண்மையான அகதிகள் இருக்கக் கூடும் என வாதிட்ட அவர், அவர்களை திருப்பி அனுப்புவதால் அவர்கள் மீது வழக்குப் போடப்படும் அபாயமும் அவர்களுடைய உயிருக்கான மருட்டல்களும் அதிகரித்துள்ளன. அதனால் தங்களுடைய உயிர்களுக்கும் சுதந்திரத்துக்கும் மருட்டலை தரக் கூடிய ஒர் இடத்துக்கு மக்களை அனுப்புவதைத் தடுக்கும் அனைத்துலக பாரம்பரியச் சட்டத்தை மலேசியா மீறுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹிஷாம்: பர்மிய ஒப்பந்தம் நாம் சரி என காட்டுகிறது

அகதிகளுடைய உரிமைகளை வரையறுக்கும் 1951ம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடவில்லை.

கைதிகள் பரிவர்த்தனை உடன்பாடு மீது உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கடந்த திங்கட்கிழமை பர்மிய வெளியுறவுத் துணை அமைச்சர் ஊ மாவ்ங் மிண்ட்-உடன் பேச்சு நடத்தினார்.

உத்தேச ஒப்பந்த விவரங்கள் அடுத்த வாரம் தொடக்கம் விவாதிக்கப்படும். எத்தனை கைதிகள் அந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்படுவர் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

“நாம் பர்மாவுடன் அத்தகைய பரிவர்த்தனையைச் செய்து கொள்ள முடியுமானால் மற்ற நாடுகளுடனும் ஏன் அவ்வாறு செய்து கொள்ளக் கூடாது”, என ஹிஷாமுடின் வினவினார்.

ஆஸ்திரேலியா மலேசியா அகதிகள் பரிவர்த்தனை ஒப்பந்தம் தோல்வி கண்ட பின்னர் மலேசியா மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சி இதுவாகும்.

அகதிகள் பாதுகாப்புக்கு தேவையான சட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதால் ஆஸ்திரேலிய நீதிமன்றங்கள் அகதிகளை மலேசியாவுக்கு அனுப்புவதைத் தடுத்து விட்டன.