மஇகா, மைன்கோ என்னும் நிறுவனத்தை அமைக்கிறது

அரசாங்கம் அறிவிக்கும் பல மேம்பாட்டுத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக மஇகா மைன்கோ பெர்ஹாட் என்னும் சிறப்பு நிறுவனத்தை அமைத்துள்ளது.

அந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மலேசிய இந்திய சமூகம் பொருளாதார நன்மைகளை அடையும் பொருட்டு அந்த நிறுவனம் அமைக்கப்படுகிறது.

எம்ஆர்டி ரயில் போக்குவரத்துத் திட்டம், பெரிய கோலாலம்பூர் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பொருளாதார உருமாற்றுத் திட்டங்களின் கீழ் வர்த்தக வாய்ப்புக்களைப் பெறுவதற்கு மைன்கோ முயலும் என அந்தக் கட்சியின் தலைவர் ஜி பழனிவேல் சொன்னார்.

அந்த நிறுவனம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அது புதிய தொழில்களை கையகப்படுத்துவதும் அல்லது பங்குப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் பங்குகளை கொள்முதல் செய்யும்.

அந்த மைன்கோ தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவியாக எளிய நிபந்தனையுடன்  கூடிய கடன்களை வழங்குமாறு மஇகா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளும் என்றும் பிரதமர் துறை அமைச்சருமான பழனிவேல் சொன்னார்.

“நாங்கள் மைன்கோ-வை வெற்றிகரமான வர்த்தக அமைப்பாக திகழச் செய்து இந்திய சமூகத்துக்கு வலிமையூட்ட விரும்புகிறோம்,” என அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இப்போது பொருளாதார வளர்ச்சியில் துணை நீரோட்ட சமூகமாக உள்ள இந்திய சமூகத்தை நாட்டின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கும் அந்த நடவடிக்கை உதவும் என்றார் அவர்.

இந்த நாட்டில் வழங்கப்படும் சிவில் குத்தகைகளில் எட்டு விழுக்காடு மலேசிய இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் மஇகா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளும் என்றும் பழனிவேல் தெரிவித்தார்.

அதனால் மலேசிய இந்தியக் குத்தகையாளர்கள் கூடுதல் ஆதாயத்தைப் பெற முடியும். “இல்லை என்றால் மற்றவர்களுடைய அனுமதிகளைப் பயன்படுத்தும் போது மலேசிய இந்தியர்களுடைய ஆதாய விகிதம் பெரிதும் குறைந்து விடுகிறது. ஆகவே நாங்கள் நேரடியாகக்  குத்தகைகளைப் பெற விரும்புகிறோம்,” என்றார் அவர்.

அந்தத் திட்டங்கள் அனைத்தும் எப்போது வெற்றி பெறும் என பழனிவேலிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்,” கால அவகாசமும் அரசாங்க ஆதரவும் தேவைப்படுகிறது”, என்றார்.

“அரசாங்கத்துடனும் தனியார் துறையுடனும் நாம் எவ்வாறு ஒத்துழைக்க முடியும்”, என்பது மீது மஇகா தனது யோசனைகள் அனைத்தையும் உள்ளடக்கிய திட்ட ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரிப்பதாகவும் மஇகா தலைவர் கூறினார்.

பெர்னாமா

TAGS: