பெர்சே “சட்ட விரோதமானது”: ஆட்சேபங்கள் செப்டம்பர் 19ம் தேதி செவிமடுக்கப்படும்

பெர்சே 2.0ஐ சட்ட விரோத அமைப்பு என உள்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியதை நீதித் துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சமர்பிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பான பூர்வாங்க ஆட்சேபங்களை செவிமடுப்பதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 19ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது.

தூய்மையான, சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் அந்த அமைப்பு சமர்பித்த நீதித் துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை எதிர்த்து வழக்காட உள்துறை அமைச்சரும் அரசாங்கமும் முடிவு செய்துள்ளதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னர் முறையீட்டு, சிறப்பு அதிகாரங்கள் பிரிவின் நீதிபதி ரோஹானா யூசோப், அந்தத் தேதியை நிர்ணயம் செய்தார்.

சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த ஐவர் கொண்ட குழுவுக்கு மூத்த கூட்டரசு வழக்குரைஞர் கமாலுதின் முகமட் சைட் தலைமை ஏற்றுள்ளார். அவர் அந்த அலுவலகத்தின் விசாரணை, முறையீட்டுப் பிரிவுக்குத் தலைவரும் ஆவார்.

பெர்சே 2.0ன் 12 உறுப்பினர்களைக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவை வழக்குரைஞர் பாஹ்ரி அஸ்ஸாட் பிரதிநிதித்தார். ஜுலை 9ம் தேதி பேரணி நடைபெறுவதற்கு முதல் நாள் 48 பக்கங்களைக் கொண்ட விண்ணப்பத்தை அவர் சமர்பித்தார். அதில் உள்துறை அமைச்சர், தேசிய போலீஸ் படைத் தலைவர், அரசாங்கம் ஆகிய தரப்புக்கள் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பெர்சே மீதும் பெர்சே பேரணியில் பங்கு கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கபடுவோர் மீதும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் அந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.

அந்த விண்ணப்பதை சமர்பித்த கூட்டணிக்கு பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தலைமை தாங்குகிறார்.