அங்காடி வியாபாரிகள் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உதவ வேண்டும்: டிஏபி, மசீச வேண்டுகோள்

1 limடிஏபி-யும்  மசீச-வும்  அங்காடி  வியாபாரிகளின்  செலவுகளைக்  குறைக்கவும்  அவர்களின்  எண்ணிக்கையை  அதிகரிக்கவும்  பல ஆலோசனைகளை  முன்வைத்துள்ளன.

சுகாதார   அமைச்சு,  அங்காடி  வியாபாரிகளுக்கு  சுகாதார   பயிற்சி வழங்கும்  பொறுப்பைத்  தனியார்துறையிடம்  ஒப்படைத்திருப்பதை  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எதிர்க்கிறார்.

“சுகாதார   அமைச்சு இலவசமாகவே  பயிற்சிகளை  நடத்தலாமே?  எதற்காக தனியார்  நிறுவனங்கள்,  குறைந்த  வருமானம்  பெறும்  அங்காடி  வியாபாரிகளைப்  பயன்படுத்தி  பணம்  சம்பாதிக்க இடம்  ஏற்படுத்திக்  கொடுக்க  வேண்டும்? ரிம50  கட்டணம்  வசூலிக்கப்படுவதால்  ஆத்திரமடைந்துள்ள  அங்காடி  வியாபாரிகள்  இதென்ன  தனியார் மயமா  அல்லது பகல்  கொள்ளையா  எனக்  கேட்கிறார்கள்”,  என  லிம்  கூறினார்.

“உணவின்  பாதுகாப்பையும்  சுகாதாரத்  தரத்தையும்  உயர்த்தும்  முயற்சிகளை  மாநில  அரசு  வரவேற்கிறது. கடந்த  ஆண்டு,  உணவில்  நச்சுத்தன்மை  பற்றி  10,000-த்துக்கு  மேற்பட்ட  புகார்கள்  செய்யப்பட்டுள்ள  வேளையில்  சுகாதாரத்தை  அமல்படுத்துவதில்  எதையும்  விட்டுக்கொடுக்கக்  கூடாதுதான்.

“ஆனால்,  நச்சு உணவு  சம்பவங்களைக்  குறைக்கிறோம்  என்ற  சாக்கில்  சில  தனியார்  நிறுவனங்கள்  பணம்  பண்ணுவதற்கு  அனுமதிக்கக்  கூடாது”,  என  லிம்  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.

1 mcaமசீச  உதவித் தலைவர்  சுவா டீ  யோங்,  அங்காடி  வியாபாரிகளின்  நடைமுறைச்  செலவினங்களைக்  குறைக்க அரசாங்கம்  உதவ  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டார். அங்காடி  வியாபாரிகளின்  வணிக  உரிமக்  கட்டணங்கள்  இரத்துச்  செய்யப்படலாம்  என்று பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்   கூறி இருப்பதை  வரவேற்ற  அவர், உணவுப்  பொருள்களை  வைத்து  கொள்ளை இலாபம்  அடிக்கும்  முயற்சிகளையும்  கண்காணிக்க  வேண்டும்  என்பதையும்   வலியுறுத்தினார்.

கூடுதல்  அங்காடி  வியாபார  மையங்களை  உருவாக்கி அத்தொழிலில்  போட்டியை  ஊக்குவிக்கலாம்.  அதனால்  விலைகள்  குறையலாம்  என்றாரவர்.