கி.சீலதாஸ் – சனாதனம் என்றால் தொன்மையான நடைமுறை ஒழுக்கம் என்றும் சனாதன தர்மம் தொன்றுதொட்ட அறவொழுக்கம் என்றும் பொருள்படும். இது ஹிந்து (இந்து மதம்) என்றும் அழைக்கப்படுகிறது. சனாதன தர்மத்தைப் பற்றி தவறான கருத்துகளுக்கும் இலக்கியங்களுக்கும் பஞ்சம் இல்லை. மற்ற மதத்தினரும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லித் திரியும் நாஸ்திகர்களும் சனாதன தர்மத்தைப் பற்றி இழிவான முறையில் கேலி செய்வது, பேசுவது ஒன்றும் புதிதல்ல.
பேச்சு சுதந்திரம் என்ற உரிமையைப் பயன்படுத்தி ஒரு கீழ்த்தரமான கலாச்சாரத்தைப் பேணுபவர்கள் இப்பொழுது சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும். அதுவே தங்களது கொள்கையாகக் கொண்டிருப்பதாக இந்தியாவில் இயங்கும் திராவிட இயக்கத்தினர் மார் தட்டுவது சகஜமாகிவிட்டது! குறிப்பாக, இந்த சனாதன தர்ம எதிர்ப்புச் சக்திகள் தங்களை ஈ.வெ.ராமசாமியின் (ஈவெரா) வாரிசுகள், பேரப்பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது அவர்களின் உரிமை.
இதில் குறிப்பாக தமிழகத்தின் துணை முதலமைச்சர் தாம் ஈ.வெ.ராவின் பேரன் என்று கூறுகிறார். ஈவெரா நாஸ்திகர். நாஸ்திகவாதிகள் மதத்தை நம்புவதில்லை. அவர் தமது புதிய மத அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது அவருடைய உரிமை. ஆனால், அவர் நாஸ்திகவாதியா? ஆஸ்திகவாதியா?
அரசியல்வாதிகள் தேர்தலில் பங்கு பெறும்போது ஹிந்து கோயில்களுக்குப் போய் தங்களின் நியமனப் பத்திரத்தைச் சிலையின் முன் வைத்து வணங்குவது இயல்பு என்று செய்திகள் வருகின்றன. அதுமட்டுமல்ல, தேர்தல் காலம் முடிந்ததும் ஹிந்து கடவுள் எதிர்ப்பை எடுத்துக்கொள்வார்கள். தேர்தல் காலத்தின் போது ஹிந்து கடவுளின் தயவு தேவைப்படும். இதுவும் பகுத்தறிவாளர் நாஸ்திகர்களின் அரசியல் நாகரிகம்.
சனாதன தர்மத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இந்த நாட்டில் கொண்டு வரலாமா? கூடாது. ஈ.வெ.ரா இந்த நாட்டுக்கு வந்தபோது கடவுள் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது உண்மை. சிங்கப்பூரிலும் அத்தகைய பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார். அது இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம். அறிஞர் அண்ணாதுரை இந்த நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வந்து பல பொது கூட்டங்களில் பேசினார். மதத்தைப் பற்றியோ கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ பேசுவதைத் தவிர்த்தார்.
தமிழகத்தின் புது தலைமுறை அரசியல் தலைவர்கள் வந்தால் இந்த நாட்டு அரசியல் சட்டத்தைத் தெரிந்திருப்பது நல்லது. இந்தியாவிலிருந்து வருவோர் ஹிந்து தர்மத்தை இழிவாக விமர்சித்தது உண்டு. அவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நாட்டு அரசமைப்புச் சட்டம் எல்லா மதங்களும் யாதொரு இடர்பாடும் இல்லாமல் இயங்க உரிமை உண்டு.
நாஸ்திகன் என்பதன் பொருள் கடவுள் நம்பிக்கையற்றவர் என்பதாகும். எல்லா மதங்களும் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. எனவே, “என் பகுத்தறிவு கடவுளை மறுக்கிறது. ஆனால், கடவுளைப் போற்றும் மதத்தைச் சேர்ந்தவன்” என்றால் அறிவிலித்தனத்தை வெளிப்படுத்துமே! இதை உணராதவர்கள் தொன்மையான அறநெறிகளைக் கொண்ட சமயத்தை அழிக்கப் போவதாகச் சொல்லுவதை எந்த ரக சிறுபிள்ளைத்தனத்தில் சேர்த்துக் கொள்வது?
முக்கியமான மதங்களைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கையைக் கண்ணுறுவது பலனளிக்கும். 2023ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிறிஸ்தவர்கள் 30.7%, இஸ்லாமியர்கள் 24.9%, ஹிந்துக்கள் 15.1%, சமயச் சார்பற்றவர்கள் 15.6%, புத்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் 6.6%. இது பொதுவான கணக்கெடுப்பாகும்.
கிறிஸ்தவர்களை எடுத்துக்கொண்டால் அதில் கத்தோலிக்கர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, பலவித வேறுபாடுகளைக் கொண்ட குழுமங்களும் இந்தப் பொது கிறிஸ்துவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதே நிலைதான் இஸ்லாமின் விழுக்காடும். ஹிந்து மதத்தை எடுத்துக் கொண்டால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி புத்தமார்க்கம், சீக்கியர்கள் யாவரும் ஹிந்து குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.
அதுபோலவே, யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் யாவும் அபுரஹாம் வழித் தோன்றல்கள் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். இதை எல்லாம் பார்க்கும் போது சனாதன தர்மத்தை அழிக்கப் புறப்பட்டிருக்கும் தவறான கருத்துடையவர்கள் உண்மையைத் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இந்தக் காலகட்டத்தில் மதங்கள் எந்த மதம் சிறப்பானது, கடவுளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது என்ற போட்டியில் கவனம் செலுத்துகின்றன. உலகத்தையே கவர்ந்துவிட வேண்டும், மனித குலமே ஒரே மதத்தைப் பேண வேண்டும் என்ற ஒரு சில மதங்களின் குறிக்கோள் நாளுக்கு நாள் பலமடைந்து வருவதைக் காணலாம்.
கிறிஸ்துவத்தைப் பரப்பும் வகையில் துணிந்து நிற்கும் ஜோர்ஜ் சோரோஸ் தாம் இவ்வுலகில் கடவுளின் பிரதிநிதி என்கிறார். அவருடைய பார்வையில் சுமார் நூறு கோடி ஹிந்துக்களை தம் வழிக்குக் கொண்டு வருவதில் உற்சாகம் கொண்டுள்ளார். அதுபோன்ற நம்பிக்கையைத் தானே மற்ற பிரதான மதங்களும் கொண்டிருக்கின்றன.
உலகின் எந்தப் பக்கம் திரும்பினாலும் அரசியல் மதச் சார்பற்ற கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் காட்டுவதில் ஆர்வம் குன்றியிருப்பதைக் காணலாம். மாறாக, மத கோட்பாடுகள் முன்னிலை வகிப்பதைக் கவனிக்காமல் இருப்பது உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் என்பதை உணராத ஆபத்தான நிலைபாடாகும். முதலாளித்துவம், கம்யூனிஸம், ஃபாசிஸம் போன்ற அரசியல் கோட்பாடுகள் இப்பொழுது பொருளாதார கோட்பாட்டில் தான் தீவிர கவனத்தைக் கொண்டிருக்கின்றன.
இதற்கு மதம் ஒரு கருவியாக மாறி வருவதைக் காண மறுப்பது பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கொண்டிருக்கும் மதப் பகைக்குப் புது அடையாளம் கொடுத்து உலக ஆதிக்கத்தை அடைவதே. சனாதன தர்மம் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை தான்.
ஆனால், அதைப் பின்பற்றுவோரின் மனமாற்றம் தேவை. அந்த மனமாற்றப் போரில் – மதமாற்றப் போரில் – ஜோர்ஜ் சோரோஸ் போன்றோர் தீவிரமாகிவிட்டனர். பாரத மண்ணைக் கவர்ந்தவர்கள் பாரதத்தின் எல்லா மக்களின் மனதையும் கவர முடியவில்லையே! பிற மதத்தினரைக் கவர்ந்து உலகத்தையே கைப்பற்றுவது. இதுதானே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆரம்பத்தில் வெற்றி கிட்டிய போதிலும் அது நீடிக்கவில்லையே.
சனாதன தர்மத்தை அழிக்கப் போவதாகக் கூறி புறப்பட்டிருக்கும் பகுத்தறிவாள போலி நாஸ்திகர்கள் அதை அழித்த பிறகு எந்த மதத்தை ஏற்பார்கள்?
எந்த மதத்திற்கு ஆதரவு தருவார்கள்? இந்த நாஸ்திகர்கள் தெளிவான விளக்கத்தைத் தருவார்களா? சனாதன தர்மம் அழிக்கப்பட்டவுடன் கால்டுவெரைக் கண்ட கிறிஸ்துவ திராவிடம் அமைக்கப்படுமா?
அதை மற்ற மதத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? சனாதன தர்மத்தை அழிப்பதால் மட்டும் நாட்டில் அமைதியோ நிம்மதியோ ஏற்படாது. அதன் அழிவு பலவிதமான கேடுகளை விளைவிக்கும் என்பதை இந்தப் போலி நாஸ்திகர்கள் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமே!
சனாதன தர்மத்தை அழிக்கப் புறப்படுவோர் தங்களின் பண்டைய மரபுகளை, நாகரிகங்களை அழிக்க துணைப் போகிறார்கள் என்றால் மிகையாகாது. உலகெங்கும் சனாதன தர்மம் போற்றப்படுகிறது. மன நிம்மதி தேவை. அதைத் தரவல்லது சனாதன தர்மம். எப்படி? உன்னைச் சிந்திக்கச் செய்வது சனாதன தர்மம்.
“சிந்திக்கும் வரம் தா” என்பதே சனாதன தர்மத்தைப் பேணுவோரின் பிரார்த்தனை.