இராகவன் கருப்பையா – நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்களில் குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று துணிச்சலாகக் கூறலாம்.
முனைவர் மாரி சச்சிதானந்தம் தலைமையிலான கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம், ந.மதியழகனை தலைவராகக் கொண்ட சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் மற்றும் ந.கு.முல்லைச் செல்வன் தலைமையிலான பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம், ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இதர மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கங்களில் பெரும்பாலானவை ஏனோ தானோ எனும் போக்கில் ஈடுபாடற்ற நிலையில்தான் உறங்கிக் கிடக்கின்றன.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் கூட அண்மைய காலம் வரையில் சுற்றுப் பயணங்களில்தான் அதிக கவனம் செலுத்தி வந்தது நிறைய பேருக்குத் தெரியும்.
எனினும் மோகனன் பெருமாள் தலைமையிலான அதன் புதிய செயற்குழு தற்போது சற்று வித்தியாசமானத் திட்டங்களை முன்னெடுப்பதைப் போல் தெரிகிறது.
இருப்பினும் இந்த இயக்கங்கள் எல்லாமே எதிர்காலத்தில் நம் நாட்டில் ‘வாழையடி வாழை’யாக தமிழ் இலக்கியம் தழைத்திருக்கத் தேவையான ஒரு முக்கியமான அம்சத்தை மறந்து செயல்படுகின்றன என்பது வருத்தமான விஷயம்.
அதாவது கடந்தகால, நிகழ்கால எழுத்தாளர்கள் மீது மட்டுமே அச்சங்கங்கள் அதிக கவனம் செலுத்துகின்றனவேத் தவிர இளைஞர்களையும் சிறுவர்களையும் தமிழ் எழுத்துத் துறையில் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் செல்ல என்ன செய்கின்றன என்று தெரியவில்லை.
சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் அண்மையில் பெரும் திட்டமொன்றை கையிலெடுத்து வெற்றிகரமாக அதனை அமலாக்கம் செய்தது.
அதாவது நாட்டிலுள்ள 200கும் மேற்பட்ட முன்னணி எழுத்தாளர்களின் விவரங்களை ஒன்று திரட்டி, ‘வாசகர் களஞ்சியம்’ எனும் தலைப்பில் 210 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலை அவ்வியக்கம் தயார் செய்து வெளியிட்டது.
இந்த முன்னெடுப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றுதான் எனும் போதிலும் அந்த புத்தகத்தில் இளையோரை எங்குமே காணவில்லை. அதில் பிரசுரம் கண்டுள்ள 200கும் மேற்பட்டோரில் கிட்டதட்ட எல்லாருமே 40 அல்லது 50 வயதுக்கும் மேற்பட்டோர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த இயக்கத்தின் செயலவையினரும் கூட அனேகமாக அந்த வயதுப் பிரிவில் உள்ளவர்களாகத்தான் இருக்கக் கூடும்.
கெடா மாநில இயக்கம், பேராக் மாநிலச் சங்கம் மற்றும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், ஆகியவற்றிலும் கூட இதே நிலைதான் என்பது வரவேற்கத்தக்க ஒன்றல்ல.
அரசியல்வாதிகளைப் போல ‘உடும்புப் பிடி’யாக நாற்காலிகளை இறுகப் பிடித்துக் கொண்டிருக்காமல் இளையோருக்கு வழிகாட்டும் வகையில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பள்ளிப் பிள்ளைகளுக்கும் இளையோருக்கும் தமிழ் எழுத்துத் துறையில் ஊக்கம் கொடுப்பதற்கானத் திட்டங்களை வகுக்க வேண்டும். பழைய எழுத்தாளர்களையும் முதியோரையும் வைத்துக் கொண்டு எவ்வளவு நாள்களுக்குத்தான் ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது?’
இப்படியே போய்க் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் இந்த எழுத்தாளர் இயக்கங்களுக்கு உறுப்பினர்கள் இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்படும் அல்லவா?
எனவே இவ்வியக்கங்களில் பழைய எழுத்தாளர்கள் எழுத்துத் துறையில் இருக்கும் காலத்திலேயே இளையோரையும் இணைத்து அவர்களுக்கு வழிகாட்டுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்த இயக்கங்களை தொடர்ந்து வழி நடத்துவதற்கும் அவர்களை தயார் செய்ய வேண்டும்.
அப்படி இல்லையென்றால், “முன்பொரு காலத்தில் நம் நாட்டில் தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் இருந்தன,” என்று நம் எதிர்காலச் சந்ததியினர் பேசிக் கொண்டிருப்பார்கள்.