ரோன் 95 பெட்ரோலை ஏழைகளுக்கு மட்டுமே விற்பதென அரசாங்கம் வரையறுக்கப் போவதாகக் கூட்டரசுப் பிரதேச அமைச்சரை மேற்கோள்காட்டி நாளேடுகளில் வெளிவந்த செய்திகளை இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பக்கார் மறுத்தார்.
தெங்கு அட்னான் மன்சூரிடமே அதைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாக கைரி கூறினார்.
“குறைந்த வருமானம் பெறுவோருக்கு அல்லது ஏழைகளுக்கு மட்டும்தான் ரோன்95 விற்கப்படும் என்று தெங்கு அட்னான் சொல்லவே இல்லை. உண்மையற்ற கதைகளை இட்டுக் கட்டாதீர்கள்”, என்றவர் டிவிட்டரில் கூறினார்.
தெங்கு அட்னானும் டிவிட்டரில் அதை மறுத்தார்.
மே அல்லது ஜூனில் புதிய விலைக் கொள்கை அமலுக்கு வந்தபின்னர் ரோன் 95 குறைந்த வருமானம் பெறுவோருக்கு மட்டுமே விற்கப்படும் என தெங்கு அட்னான் கூறியதாக த ஸ்டார், நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் உள்பட பல நாளேடுகளில் செய்தி வெளியாகி இருந்தது.