அல்லாஹ் விவகாரத்தில் நஜிப்பின் நிலைப்பாட்டைச் சாடியது பெர்காசா

perkasaமலாய்க்காரர்  உரிமைக்காகக்  குரல்கொடுக்கும்  பெர்காசா     பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மீது  ஆத்திரம்  கொண்டுள்ளது.  கிறிஸ்துவர்கள்  ‘அல்லாஹ்’  என்னும் சொல்லைப்  பயன்படுத்துவதை  அவர்  கடுமையாகக்  கண்டிக்கவில்லையாம். 

அல்லாஹ்  விவகாரத்தில்  தொடர்ந்து  சர்ச்சை  நிலவிவரும்  வேளையில்  இதுவரை  மவுனமாக  இருந்த  நஜிப்,  நேற்று அம்னோ  உச்சமன்றக்  கூட்டத்துக்குப்  பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்தபோது  அமைச்சரவையின்  10-அம்ச  தீர்வு  மாநிலச்  சட்டத்துக்குக்  கட்டுப்பட்டதே  என்பதை  உறுதிப்படுத்தினார். அதாவது, மாநிலச்  சட்டம்  அல்லாஹ்  சொல்லை  கிறிஸ்துவர்கள்  பயன்படுத்தத்  தடை  போட்டால்  அங்கு  மாநிலச்  சட்டமே  முன்னுரிமை பெறும்.

நஜிப்பின்  அறிவிப்புக்கு  எதிர்வினையாக  இன்று அறிக்கை ஒன்றை  வெளியிட்ட  பெர்காசா இஸ்லாமிய  விவகாரப் பிரிவுத்  தலைவர்  உஸ்தாஸ்  ஷம்சுடின்  மொனெர்    பெர்காசா,  கத்தோலிக்க  தேவாலயம்  ‘அல்லாஹ்’  என்னும்  புனிதத்தைப் “பழித்துரைப்பதையும்  அவமதிப்பதையும்  கேலி  செய்வதையும்”  கண்டிப்பதில்  “கடுமை இல்லை,  வெளிப்படைத்தன்மை இல்லை”  எனக்  கூறினார்.

“அம்னோ  உச்சமன்றம்  மேல்முறையீட்டு  நீதிமன்றத்  தீர்ப்பு  குறித்து  சர்ச்சை  செய்வோரை ஒரு  வார்த்தைகூட  குறைகூறவில்லை”,  என்றாரவர்.