மாற்றரசுக் கட்சிகளும் தேர்தலில் தில்லுமுள்ளு செய்ததுண்டு என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார்.
“நான் பிரதமராக இருந்த காலத்தில் மாற்றரசுக் கட்சியும் அப்படிப்பட்ட தந்திரங்களில் ஈடுபட்டதுண்டு. ஒருமுறை ஒரே வீட்டிலிருந்து 50 பேர் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டிருந்தனர்.
“எப்படி என்று தெரியவில்லை. ஆனால், அத் தொகுதியில் எப்படியோ வாக்காளர்களாக பதிந்து கொண்டார்கள்”.இன்று சோமாலியாவுக்கான பஞ்ச துயர்த்துடைப்பு நிதியைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர் இதனைத் தெரிவித்தார்.
இதுபோன்ற விவகாரங்களுக்குத் தேர்தல் ஆணையம் தீர்வு காண வேண்டும் என்று கூறிய டாக்டர் மகாதிர்,தேர்தல் சீர்திருத்தங்களுக்காக நாடாளுமன்றத் தேர்வுக்குழு அமைக்கப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அண்மையில் அறிவித்திருப்பதை வரவேற்றார்.
மலேசியாவில் தேர்தல்களில் முறைகேடுகள் அல்லது அரசின் குறுக்கீடுகள் இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது என்றாலும் உலகின் மற்ற பகுதிகளில் நடப்பதைப்போல் அவ்வளவு மோசமில்லை என்றாரவர்.
“தகுடுதத்தம் இருக்கலாம். ஆனாலும் மலேசியாவில் தேர்தல்கள் ஒழுங்காகத்தான் நடக்கின்றன. முழுக்க முழுக்க ஒழுங்காக என்றில்லாவிட்டாலும் ஒழுங்காக நடக்கின்றன.
“மற்ற நாடுகளில் அரசாங்கத்துக்கே 90 விழுக்காட்டு வாக்குகள் என்பதுபோன்ற நிலை இங்கில்லை…..இங்கு எதிரணியினரும் சில மாநிலங்களைக் கைப்பற்றியிருக்கிறார்களே.”
பெர்சே 2.0-ஐ சட்டவிரோத அமைப்பாக்கி அதை ஒடுக்கும் நடவடிக்கைக்குப் பன்னாட்டளவில் ஏற்பட்ட எதிர்ப்புக்குப் பணிந்துதான் நஜிப் தேர்வுக் குழுவை அமைக்கிறாரா என்று வினவியதற்கு அழுத்தம் உள்நாட்டிலிருந்தும் வந்தது என்று மகாதிர் குறிப்பிட்டார்.
“உலக அளவில் இல்லை, நாட்டுக்குள்ளிருந்துதான் அவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.”