பாஸ்: பினாங்கில்”வெளிநாட்டில்-பிறந்த” 14,000 வாக்காளர்கள்

பினாங்கு பாஸ், அம்மாநில வாக்காளர் பட்டியலில் 14,000 ‘அந்நியர்கள்’ வாக்காளர்களாக இடம்பெற்றிருப்பதை அடையாளம் கண்டிருப்பதாகவும் அது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இம்முறைகேட்டைக்  கட்சியின் தேர்தல் குழு கண்டுபிடித்ததாக மாநில பாஸ் இளைஞர் பகுதிச் செயலாளர் அப்னான் ஹமிமி தாயிப் அஸாமுடின் கூறினார்.

அவர்களின் அடையாள அட்டையில் நடு எண் ‘71’ என்றிருப்பதை வைத்து இதனைக் கண்டுகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

“அந்த எண்ணைக் கொண்ட வாக்காளர் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் திடீரென்று உயர்ந்துள்ளது. முஸ்மா சர்ச்சையைத் தொடர்ந்து எங்களுக்கும் சந்தேகம் தோன்றியது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அண்மையில் மலேசியாகினி, மிஸ்மா என்பவர் நிரந்தர வசிப்பிடத் தகுதிகொண்டவர் என்பதையும் ஆனால் அவர் வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளராக இடம்பெற்றிருக்கிறார் என்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தியது.

அச்செய்தி வெளிவந்த சில மணி நேரத்தில் மிஸ்மா முழுக் குடியுரிமை பெற்றவர் எனத் திருத்தம் செய்யப்பட்டது.

அதற்கு விளக்கம் கூறிய தேர்தல் ஆணையம், அது வெறும் “கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு” என்றும் மிஸ்மாவுக்கு ஜனவரியிலேயே குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது என்றும் தேசிய பதிவுத்துறை அதன் தரவுத்தளத்தில் அதற்கான திருத்தம் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டது.

அதற்குமுன்பே பாஸ், சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜோகூர், கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் நடத்திய சோதனைகளில் நிரந்தர வசிப்பிடத் தகுதிகொண்டவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாகக் கூறியது. சிலாங்கூரில் மட்டும் அப்படிப்பட்ட 1,100 பேரை அது அடையாளம் கண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 5-இல், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அம்மாநிலத்தில் மூன்றே மாதங்களில் வாக்காளர் எண்ணிக்கையில் 26,000 பேர் கூடியிருப்பதாகத் தெரிவித்தார்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அப்துல் மாலிக் காசிமின் சட்டமன்றத் தொகுதியில் அஞ்சல்வழி வாக்குகளில்  திடீரென்று 1,400 வாக்குகள் கூடியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக அவர் சொன்னார். 

ஆகஸ்ட் 9-இல், பினாங்கு பாஸ் தேர்தல் குழு, வாக்காளர் பட்டியலில் ஐயத்துக்கிடமான 237 பெயர்களை அடையாளம் கண்டிருப்பதாகத் தெரிவித்தது.

ஒருவரே இரண்டுதடவை வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருதல், வெவ்வேறு பெயர் கொண்டவர்கள் ஒரே அடையாள அட்டையைப் பெற்றிருத்தல் எனப் பல முறைகேடுகளை அது வாக்காளர் பட்டியலில் கண்டது.

இதனிடையே, வாக்காளர் பட்டியல் முறைகேடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே வைகறை தொழுகைக்குமுன் திருக்குர் ஆன் வாசகங்களை ஓதும்போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு பினாங்கு பாத்வா மன்றம்  தடை விதித்திருப்பதை ஒரு சர்ச்சையாக்கினார்கள் என்றும் அப்னான் ஹமிமி கூறினார். 

அவ்விவகாரத்தில் லிம் தலைமையிலான மாநில அரசு தலையிட்டிருக்கிறது என்றும் அது தலையிட பினாங்கு பாத்வா மன்றம் இடமளித்துள்ளது என்றும் கூறி அம்மன்றத்தையும் குறை கூறினார்கள்.

லிம், தாம் தலையிட்ட்டதாகக் கூறப்பட்டதை மறுத்தார். முப்தி ஹசான் அஹமட்டும் செய்தியாளர் கூட்டமொன்றில் அதை உறுதிப்படுத்தினார்.

பெர்சே 2.0 கோருவதுபோல்  குறையே இல்லாத ஒரு வாக்காளர் பட்டியலைத் தன்னால் தயாரிக்க முடியாதிருக்கிறது எனத் தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அப்னான் ஹமிமி குற்ப்பிட்டார்.