எம்எம்ஏ: பாலியல் வல்லுறவு பற்றி அமைச்சர் ‘அள்ளிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’

dewan 1பாலியல்  வல்லுறவு என்பதை  மலாய்க்காரர்-அல்லாதார்  சகஜமானது  என்று  ஏற்றுக்கொள்வதாக  உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  வான்  ஜாபார்  அள்ளி விட்டிருப்பதைக்  கண்டு  மலேசிய  மருத்துவச்  சங்கம்  “நம்ப  முடியாத  அளவுக்கு  அதிர்ச்சி  அடைந்திருப்பதாக”  அதன்  தலைவர்  டாக்டர்  என்.கே.எஸ். தர்மசீலன்  கூறியுள்ளார்.

வான்  ஜுனாய்டியின்  கூற்று  “இழிவானது, இனவாதம் நிரம்பியது”என்று  குறிப்பிட்ட  தர்மசீலன்,  நாடாளுமன்றத்தில்  அது ஒரு  அமளியை  உண்டுபண்ணாததும்  அவைத் தலைவர்  அதை  நாடாளுமன்ற  பதிவேட்டிலிருந்து நீக்குவதற்கு எவ்வித  முயற்சியும்  மேற்கொள்ளாததும்  ஆச்சரியமளிப்பதாகக்  கூறினார்.

“மற்றவர்களின்  உணர்வுகளுக்குக்  கொஞ்சம்கூட  மதிப்பளிக்காத  கூற்று அது. அதுவும்  மக்களின்  நாடித் துடிப்பை  நன்கு  அறிந்து  வைத்திருக்க  வேண்டியவரான  ஒரு  நாடாளுமன்ற  உறுப்பினர்  இப்படிக் கூறுவதுதான்  வியப்பை  அளிக்கிறது.

“அல்லது  இதற்கு வேறு நோக்கம்  இருக்குமோ: சொந்த  இனத்தாரின்  ஆதரவைப்  பெறப்  பார்க்கிறாரா  அவர். அப்படி  ஒரு  உள்நோக்கம்  இருக்குமானால்  அதைக்  கண்டிக்க  வேண்டும்”,  என்று  தரமசீலன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

‘இனத்துக்கோ, சமயத்துக்கோ, பண்பாட்டுக்கோ  தொடர்பில்லை’

சிலர் ஏன்  சொந்த பிள்ளைகளிடமே  பாலியல்  வல்லுறவு  புரிகிறார்கள்  என்பது மனோவியல்  பயிற்சி  பெற்ற   மருத்துவர்களுக்குக்கூட  புரிவதில்லை  என்றாரவர்.

ஒரு  புகார்  கூறப்பட்டால்  அதற்குத்  தீர்வு  காண  முற்பட  வேண்டுமே  தவிர  அதைத்  தற்காப்பதற்கு  இனத்தின்மீது  பழிபோட்டுத்  தப்பித்துக்கொள்ள  முயலக்கூடாது.

“தர்மசங்கடமாக  இருக்கிறதே  என்று  முக்கியமான  ஒரு  பிரச்னையை  மூடிமறைக்கப்  பார்ப்பது, பரவலாகிவிட்ட  அந்தப்  பிரச்னைக்குத்  தீர்வு  காண  உதவாது”,  என  தர்மசீலன்  கூறினார்.

அரசியல்வாதிகள்,  இனத்தையும்   சமயத்தையும்  காரணம்  காட்டி  சமூகப்  பிரச்னைகளைத்  தற்காக்க  முனையக் கூடாது.  பிரச்னைகளுக்குத்  தீர்வு  தங்களிடம்  இல்லையா,  தேடிப்பார்க்க  வேண்டும்,  “மடத்தனமாக, மற்றவர்களுக்கு  ஆத்திரமூட்டக்கூடிய  பதில்களைச் சொல்லிக்  கொண்டிருக்கக்  கூடாது”,  என்றவர்  சொன்னார்.