பிகேஆர் தலைமைச் செயலாளர், சைபுடின் நசுத்யோன், கோலாலம்பூரில் ரிம900 மில்லியன் செலவில் மகளிர், குழந்தைகள் மருத்துவமனை கட்டும் குத்தகைப் பணி ஒரு சிறிய கட்டுமான நிறுவனத்துக்கும் அதன் பங்காளி நிறுவனமான யுஇஎம் குரூப் பெர்ஹாட்டுக்கும் வழங்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சைபுடின் குறிப்பிட்டது பினாங்கைத் தளமாகக் கொண்டுள்ள நஜ்கோம் சென்.பெர்ஹாட்டை. அது ஒரு சிறிய நிறுவனம் என்றும் “பாரிசான் நேசனலுடன் நெருக்கமான தொடர்புகொண்டுள்ள” சிலருக்குச் சொந்தமானது என்றும் அவர் கூறினார்.
“இதுவரை அதன் மிகப் பெரிய கட்டுமான திட்டம் என்று பார்த்தால், யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியாவில் மலேசிய மருந்து மற்றும் ஊட்ட உணவுக்கழகம் கட்டியதுதான். அந்த ரிம80 மில்லியன் திட்டம் 2008-இல் அதற்கு வழங்கப்பட்டது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“ஒரு பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு தேசிய திட்டத்தை மேற்கொள்ளும் அனுபவமோ, திறனோ அந்த நிறுவனத்துக்கு இருப்பதாகக் கூற முடியாது.”
அத்திட்டத்துக்கான குத்தகையை நஜ்கோமும் யுஇஎம்-மும் பெற்றிருப்பதாக த எட்ஜ் பைனான்சியல் டெய்லியில் வெளிவந்த செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது சைபுடின் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒரு முன்னணி பொறியியல் நிறுவனமான யுஇஎம்-முக்கும் அம்னோவுடன் தொடர்பு உண்டு என்று மாச்சாங் எம்பியுமான அவர் கூறினார்.
“அந்த வகையில் இன்னுமொரு பெரிய திட்டம் இரகசியமாக நெருக்கமான தொடர்புள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.”
எந்த அடிப்படையில் அக்குத்தகை நஜ்கோம் மற்றும் யுஇஎம்-முக்கு வழங்கப்பட்டது என்று முழுமையாக விளக்கப்பட வேண்டும் என்று சைபுடின் கேட்டுக்கொண்டார்.
நஜ்கோமில் 52.5விழுக்காட்டுப் பங்குரிமையை ஜைனபி அபுபக்காரும் 47.5விழுக்காட்டுப் பங்குரிமையை ஹாஜா நஜ்முடின் காதரும் வைத்திருப்பதாக த எட்ஜ் கூறுகிறது.
பினாங்கு நீதிமன்ற வளாகத்தைப் புதுப்பிக்கும் ரிம11.15மில்லியன் திட்டம் தவிர்த்து, பெரும்பாலும் ரிம10மில்லியன் அல்லது குறைவான திட்டங்களையே அது இதுவரையிலும் மேற்கொண்டு வந்துள்ளது.
நஜ்கோமையும் அதன் இயக்குனர் ஹாஜாவையும் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை.