அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்பிப்பது மீதான விவகாரம் பினாங்கில் சூடு பிடித்து வருகிறது. 13வது பொதுத் தேர்தலில் வாக்குகளை திசை திருப்பக் கூடிய வலிமையை அந்த விவகாரம் பெற்றிருப்பதால் பாரிசான் நேசனலும் பக்காத்தான் ராக்யாட்டும் அது குறித்து தங்கள் நிலையை அவசியம் அறிவிக்க வேண்டியிருக்கும்.
அடுத்த மாதத் தொடக்கத்தில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்பிப்பதை வலியுறுத்தும் ஒர் அமைப்பு தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
பேஜ் ( PAGE ) என அழைக்கப்படும் அந்த அமைப்பு பேஸ் புக் இணையத் தளத்தில் அதற்காக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளது. ஒரு மில்லியன் மலேசியர்களை அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு ஆதரவளிக்கச் செய்வது அதன் நோக்கமாகும். கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அந்த பக்கம் அமைக்கப்பட்டது. இது வரையில் 24,316 பேர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் சார்ந்த மலேசியர்கள். அந்த எண்ணிக்கை அன்றாடம் கூடுகிறது,” என பேஜ் அமைப்பின் பினாங்கு ஒருங்கிணைப்பாளர் ரோவானா யான் கூறினார்.
பள்ளிக்கூடங்களில் அறிவியலையும் கணிதத்தையும் தொடர்ந்து ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சுக்கு முறையீடு செய்து கொள்வதும் ஒரு மில்லியன் மக்கள் ஆதரவு கிடைத்ததும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு முறையீடு செய்து கொள்வதும் அந்த அமைப்பின் நோக்கமாகும்.
“நமது எதிர்காலத் தலைமுறையினருக்கும் நாட்டுக்கும் அந்த இரு பாடங்களும் முக்கியமானவை என நாங்கள் கருதுகிறோம்,” என்றார் யாம். அவர் பினாங்கு கெரக்கான் அரசியல் பயிற்சிப் பிரிவுத் தலைவரும் ஆவார்.