கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசாரை உள்துறை அமைச்சு தற்காக்கிறது

ஷா அலாம் கிளன்மேரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சு  கூறியது.

இளைஞர்கள் இருந்த திசையில் போலீசார் மூன்று முறை சுட்டதை,  அந்தச் சம்பவம் பற்றிய புலனாய்வுகள் காட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சு தெரிவித்துள்ளது.

“அது சட்டத்திற்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் ( கொலை முயற்சி) போலீசார் அந்த விஷயத்தை புலனாய்வு செய்தனர்,” என டிஏபி பூச்சோங் உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ தொடுத்த கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.

புலனாய்வு அறிக்கைகள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன என்றும் அது புலனாய்வு மேலும் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டது என்றும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

மூவர் உயிரிழந்த அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீதான போலீஸ் புலனாய்வுகளின் முடிவு குறித்தும் அந்த இளைஞர்களின் மரணத்துக்கு பொறுப்பானவர்கள் எனக் கூறப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் பூச்சோங் எம்பி அறிய விரும்பினார்.

ஷா அலாம் கிளன்மேரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி அதிகாலையில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்றை போலீசார் விரட்டிச் சென்றதாக கூறப்பட்ட சம்பவத்தில் 22 வயதான முகமட் ஹானாபி ஒமார், 15 வயதான முகமட் ஷாமில் ஹபிஸ் ஷாபியி. 20 வயதான முகமட் ஹாய்ருல் நிஸாம் துவா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.