2009-இல், கம்போங் புவாபாலாவில் வீடமைப்புத் திட்டத்துக்கு இடமளிக்கும் வகையில் வெளியேற்றப்பட்ட 24 குடும்பங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பரிசைப் பெறப்போகிறார்கள்.
அக்குடும்பத்தினர் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இழப்பீடு அவர்களுக்குக் கிடைக்கப்போகிறது. “கடைசி இந்திய கிராமம்” என்று பெயர்பெற்றிருந்த கம்போங் புவாபாலா இருந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான சாவிகள் ஞாயிற்றுக்கிழமை அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அதற்கான அதிகாரப்பூர்வ சடங்கு காலை மணி 10க்கு நடைபெறும். முதலமைச்சர் லிம் குவான் எங், துணை முதலமைச்சர் பி.இராமசாமி, ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.இராயர் முதலியோர் அதில் கலந்துகொள்வார்கள்.
தீபாவளிக்கு முன்னதாக வீடுகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகவே பினாங்கு முனிசிபல் மன்றம் வீடுகளுக்கான தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் விரைந்து செயல்பட்டிருப்பதாக தெரிகிறது.
1,400சதுர அடி பரப்பளவைக் கொண்ட அவ்வீடுகள் ஆகஸ்ட் மாதத்திலேயே கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். தொழில்நுட்ப காரணங்களால் கட்டுமான வேலைகள் தாமதமடைந்தன.
வீடுகளைப் பெறும் அந்த 24 குடும்பங்களும் முதலமைச்சரிடமிருந்து சாவிகளைப் பெறும் நிகழ்வுக்காக தலா ரிம200 செலவிட்டிருக்கிறார்கள். என்றாலும் அதை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை. வீடுகளைப் பெறப்போகும் மகிழ்ச்சி அவர்களுக்கு.
வேதனையில் 9 குடும்பங்கள்
ஆனால், கம்போங் புவா பாலா மக்களுக்கு சரியான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று 2008-லிருந்து யார் கடுமையாக போராடினார்களோ அந்த 9 குடும்பங்களுக்கு இந்த மகிழ்ச்சி கிட்டவில்லை..
அவர்களுக்குக் கிட்டியதெல்லாம், தங்கள் கிராமத்து நண்பர்களுக்காவது ரிம 500,000 பெறுமதியுள்ள இரட்டை-மாடி வீடு கிடைக்கிறதே என்ற திருப்தி மட்டுமே.
கம்போங் புவா பாலா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் எம்.சுகுமாரனைத் தொடர்புகொண்டபோது, தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதையொட்டி ஞாயிற்றுக்கிழமை, வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு அவசரம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
இழப்பீட்டுக்காக போராடிய ஒன்பது குடும்பங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றாலும், தங்கள் நண்பர்களுக்காவது சொந்த வீடுகள் கிடைத்திருப்பதை எண்ணி அவர்கள் மனநிறைவு கொள்கிறார்கள் என்றாரவர்.
அந்த ஒன்பது குடும்பங்களின் போராட்டமின்றி மேம்பாட்டு நிறுவனம் நுஸ்மெட்ரோ வென்சர் சென்.பெர்ஹாட் இழப்பீடு வழங்க முன்வந்திருக்காது.
2009-இல் வெடித்த புவா பாலா சம்பவத்துக்குப் பின்னர் இப்போது குடியிருப்பாளர்களை வீடுகளைவிட்டு அப்புறப்படுத்த நேரும்போது மாநில அரசு கவனத்துடன் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.பாயான் பே-இல் குடியிருப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் லிம் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை நிறுத்திக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பங்களிலிருந்து எவரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுக்குச் செல்ல மாட்டார்கள் என்று இப்போது ஈப்போவில் வேலைசெய்யும் சுகுமாரன் தெரிவித்தார்.
“நாங்கள் தேர்தலுக்காகக் காத்திருக்கிறோம். அப்போது மாநில அரசு எங்களிடம் எப்படி நடந்துகொண்டது என்ற உண்மையை அம்பலப்படுத்துவோம். மக்களுக்கு அது தெரிய வேண்டும்”, என்று மலேசியாகினியிடம் அவர் கூறினார்.
“பக்காத்தான் ரக்யாட் அரசு எங்களுக்கு உதவும் என்று நம்பினோம். ஆனால், ஏமாந்து போனோம். அதற்காக பிஎன் அரசுநல்லது என்று சொல்லவில்லை.தேர்தலின்போது இரண்டுக்கு எதிராகவும் பரப்புரை செய்வோம்”, என்றாரவர்.
தாமும் மற்ற குடியிருப்பாளர்களும், எந்தவோர் அரசியல் கட்சிக்காவும் தேர்தல் வேலைகள் செய்யப்போவதில்லை என்று கூறிய சுகுமாரன், ஒரு என்ஜிஓ(அரசுசாரா அமைப்பு)-வாக தனித்து நின்று நிலக்கொள்முதல், குடியிருப்பாளர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை போன்றவற்றின் பின்னணியில் உள்ள உண்மைகளைப் பகிரங்கப்படுத்தப்படுத்தப் போவதாகக் கூறினார்.
புக்கிட் குளுகோர் எம்பியும் டிஏபி தேசியத் தலைவருமான கர்பால் சிங், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ முன்வராதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“அவர் பெயருக்குத்தான் எங்கள் எம்பி.ஆனால், (மாற்றரசுக்கட்சித் தலைவர்) அன்வார் இப்ராகிமுக்காகத்தான் போராடுவார்.எல்லாம் பணத்துக்காக”, என்று குறைப்பட்டுக் கொண்டார் சுகுமாரன்.
‘தமிழர்களின் ஹை சேப்பரல்’ என்றழைக்கப்பட்ட கம்போங் புவா பாலாவில் 65 குடும்பங்கள் ஐந்து தலைமுறைகளாக சுமார் 200 ஆண்டுக்காலம் வாழ்ந்து வந்தன.
ஆனல் முன்பிருந்த பிஎன் அரசாங்கம் அந்தக் கிராமம் அமைந்திருந்த 2.6 ஹெக்டார் நிலத்தை கோபரசாசி பெகாவாய் கெராஜாஆன் புலாவ் பினாங் பெர்ஹாட்டுக்கு விற்றுவிட்டதால் 2009 ஆகஸ்ட் 3-இல், அதன் குடியிருப்பாளர்கள் இடத்தைக் காலிசெய்யும்படி பணிக்கப்பட்டனர். கோபராசி, நிலத்தை மேம்படுத்தும் பணியை நூஸ்மெட்ரோ வென்சர்ஸ் சென்.பெர்ஹாட்டிடம் ஒப்படைத்தது.
ஆவணங்களின்படி நிலத்தை விற்றது பிஎன் அரசு ஆனால் நில விற்பனையையும் நிலத்தின் புதிய உரிமையாளரையும் உறுதிப்படுத்திக் கடிதம் வெளியிட்டது இப்போதைய லிம்மின் அரசு.
கம்போங் புவா பாலாவிலிருந்தும் கம்போங் பொக்கோக் ஆசாமிலிருந்தும் குடியிருப்பாளர்கள் குடியிருப்புப் பகுதிகளைக் காலி செய்ய வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவுகள் உள்ளபோதிலும் பக்காத்தான் அரசு அவர்களை வெளியேற்றியதாகக் கூறப்படுவதை லிம் மறுத்தார்.
கம்ப்போங் புவா பாலாவைப் பொருத்தவரை, குடியிருப்பாளர்கள் தற்காலிக குடியுருப்பு உரிமத்தைத்தான் வைத்துக்கொண்டிருந்தார்கள். என்றும் பிஎன் அரசுதான் தனியார் திட்டங்களுக்காக அவர்களின் நிலங்களைப் பறித்துக்கொண்டது என்றும் அவர் சொன்னார்.
மே மாதம். பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பத்தினருக்காக அனுதாபம் தெரிவித்த இராமசாமி, மேம்பாட்டாளர் வழங்க முன்வந்த இழப்பீட்டை ஏற்பதற்கு தம் அலுவலகம் அவர்களுக்கு நான்குமாதம் அவகாசம் அளித்திருந்ததாகக் கூறினார்.
அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.அதனால், இழப்பீட்டை ஏற்றுக்கொள்ள முன்வந்த குடியிருப்பாளர்கள் மட்டும் வீடுகளைப் பெற்றார்கள் என்றாரவர்.
‘வஞ்சமிக்க மாநில அரசு’
இதனிடையே, கம்போங் புவா பாலா குடியிருப்பாளர் சங்க(கேபிபி) துணைச் செயலாளர் தமராஜ் சந்திரன், தங்கள் பக்க நியாயத்தை மாநில அரசு காதுகொடுக்கக் கேட்கவில்லை என்றும் தாங்கள் லிம்மையோ இராமசாமியையோ கொம்டாரில் அவர்களின் அலுவலகத்தில் சந்திப்பதை அது தடுத்து விட்டது என்றும் தெரிவித்தார்.
தாங்கள் போராட்டம் நடத்தியதால் அரசு தங்களைப் “பழி வாங்க” முடிவுசெய்து மற்ற குடும்பங்களுக்குக் கிடைத்த இழப்பீடு தங்களுக்குக் கிடைக்காமல் தடுத்து விட்டது என்றாரவர்.
2008-இல் கடுமையாக போராடி யாரைத் தலைவர்கள் ஆக்கினார்களோ அவர்களிடமிருந்து இப்போது நல்ல பாடம் கற்றுகொண்டதாக அவர் கூறினார்.
“இந்தத் தலைவர்கள் பிஎன், மேம்பாட்டாளர் என எல்லாரையும் குறை சொல்வார்கள் ஆனால், தங்களிடம் குறை இருப்பதை மட்டும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்”, என்றவர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் தமராஜும் அவரின் நண்பர்களும் தலைகாட்ட மாட்டார்கள்.
“ஒரு நாள் அவர்கள் எங்களை ஏமாற்றிய உண்மைக் கதை தெரியவரும்.
“எங்களின் கெளரவம் கண்ணியம் எல்லாமே பறிபோய்விட்டது. ஏழைகளுக்கு உதவி, முதலாளித்துவத்துக்கு எதிர்ப்பு என்று அவர்கள் முழங்கியதைக் கேட்டு புதிய(பக்காத்தான்) அரசு எங்களுக்கு உதவும் என்று நம்பினோம்.
“கிராமவாசிகளுக்காகவும் எங்களின் உரிமைகளுக்காகவும் போராடிய நாங்கள் முடிவில் வீடுகளை இழந்து நிற்கிறோம்”, என்றவர் மனம் நொந்தார்.