பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் பதின்ம வயது புதல்வரால் “மானபங்கப்படுத்தப்பட்டதாக” கூறப்பட்ட இளம் பெண், அந்த விவகாரத்தில் தாம் இழுக்கப்பட்டது மீது தாம் “அதிர்ச்சியும் அச்சமும்” அடைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.
மானபங்கப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பள்ளி மாணவியை சித்தரிப்பதற்குப் பல வலைப்பதிவாளர்கள் பயன்படுத்தியுள்ள படத்தில் உள்ள 21 வயதான அன்யா கோர்க் இன்று விடுத்த பத்திரிக்கை அறிக்கையில் அவ்வாறு கூறியுள்ளார்.
அந்த 16 வயது சிறுவனால் அல்லது அவரது குடும்பத்தினரால் “எந்த வகையிலும் தாம் பாதிக்கப்படவில்லை” என அவர் சொன்னார்.
“நான் எந்த வகையிலும் ஒரு போதும் உடல் ரீதியாக தாக்குதலுக்கு இலக்கானதில்லை. அந்த ஆபாசமான ஆதாரமற்ற வதந்திகள் தொடர்பில் என்னுடைய படம் வெளியிடப்பட்டதின் மூலமாகவே எனக்கு ‘மானபங்கம் ஏற்பட்டுள்ளது’ ” என அவர் சொன்னார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக தாம் மலேசியாவுக்கு செல்லவில்லை என்றும் “சம்பந்தப்பட்ட மக்களைச் சந்தித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை” என அமெரிக்காவில் வெல்லஸ்லி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியான கோர்க் குறிப்பிட்டார்.
“இது எப்படி நிகழ்ந்தது என்பது மீது நான் முழுக்க முழுக்க குழப்பம் அடைந்துள்ளேன் எனச் சொல்லத் தேவை இல்லை. அந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினால் அவதூறுக்கு இலக்கான அந்தச் சிறுவனுக்கு நான் என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”, என்றார் அவர்.
‘உண்மையில் பாதிக்கப்பட்டவரை’ பாதுகாக்க கோர்க் படம் பயன்படுத்தப்பட்டது’
மலேசியாவில் உள்ள மக்களும் ஊடகங்களும் தமது தனிப்பட்ட சூழ்நிலையை மதிக்க வேண்டும் எனவும் கோர்க் கேட்டுக் கொண்டார். அவருடைய படம் இன்னொரு இணையத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
” பொது மக்களும் மலேசிய ஊடகங்களும் என்னுடனும் என் குடும்பத்தாருடனும் கல்லூரியுடனும் சதுரங்க சம்மேளனத்துடனும் மற்ற அமைப்புக்களுடனும் தேவையில்லாமல் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என நான் நம்புகிறேன்”, என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“தார்மீக ரீதியில் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித் தனமான” பொய்கள் மூலம் தமது பதின்ம வயது புதல்வனுடைய வாழ்க்கையை நாசப்படுத்துவதின் மூலம் தமது அரசியல் வாழ்க்கையை முடிக்க அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் முயலுன்றனர்”, என புதன்கிழமை லிம் கடுமையாகச் சாடியிருந்தார்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் ஹெங் ஈ தேசிய இடைநிலைப் பள்ளிக் கூடத்தில் அத்தகைய சம்பவம் ஏதும் நிகழவில்லை என அதன் தலைமை ஆசிரியர் கோ பூன் போ மறுத்துள்ளார். வலைப்பதிவுகளில் வெளியிடப்பட்டிருந்த மாணவி அந்தப் பள்ளியில் பயின்றதாகக் கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.
கோர்க்கின் அடையாளத்தை டிஏபி அம்பலப்படுத்தியதும் “உண்மையில் பாதிக்கப்பட்டவருடைய அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு” அவரது படம் பயன்படுத்தப்பட்டதாக அந்த விவகாரம் மீது வலைப்பதிவுகளை எழுதிய பலர் பதில் அளித்துள்ளனர்.