அஜிஸ் பேரிக்கு ஆதரவாக வழக்குரைஞர்களும் கல்வியாளர்களும் அணி திரளுகின்றனர்

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இடை நீக்கம் செய்துள்ள அரசியலமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அஜிஸ் பேரிக்கு ஆதரவாக சட்டத்துறையிலும் கல்வித் துறையிலும் உள்ள அவரது நண்பர்கள் ஒன்று திரளுகின்றனர்.

அந்த நடவடிக்கை “அப்துல் அஜிஸின் கல்விச் சுதந்தரத்துக்கும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்தரத்துக்கும் ஏற்பட்டுள்ள அப்பட்டமான அத்துமீறல்” என மலாயாப் பல்கலைக்கழக கல்வியாளர் சங்கம் நேற்று விடுத்த அறிக்கையில் சாடியிருந்தது.

ஆட்சியாளர் ஒருவரை ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்வதற்கு தேசத் துரோகச் சட்டம்
அனுமதிப்பதாக அந்தச் சங்கத்தின் தலைவரும் சட்டத்துறை இணைப் பேராசிரியருமான அஸ்மி
ஷாரோம் கூறினார்.

“அப்துல் அஜிஸ் ஆட்சியாளர் தமது அரசியலமைப்பு எல்லைக்கு அப்பால்
செயல்பட்டிருப்பதாக மட்டுமே கூறியுள்ளார்.”

“அது சட்டப்பூர்வமான கருத்து ஆகும். அது ஆட்சியாளருக்கு எதிராக வெறுப்புணர்வை
நேரடியாகவோ, மறைமுகமாகவோ தூண்டவில்லை,” என்றும் அந்த மலாயாப் பல்கலைக்கழக
விரிவுரையாளர் குறிப்பிட்டார். அதனால் தேசத் துரோகம் மீது அப்துல் அஜிஸுக்கு எதிராக
நடத்தப்படும் விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

கல்வியாளர் என்னும் முறையில் தாம் நிபுணத்துவம் பெற்ற துறையில் பொது மக்களுக்கு நடப்பு
விவகாரங்களை விளக்குவதற்கு அப்துல் அஜிஸ் கடமைப்பட்டுள்ளார்.

“கல்விச் சுதந்தரம் இல்லை என்றால் நமது நாட்டின் அறிவாற்றல் திறனில் எந்த மேம்பாடும் இருக்காது.”

ஆயிரக்கணக்கானவர் ஆதரவு

இதனிடையே அப்துல் அஜிஸ் மீது ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது, “கூட்டரசு
அரசியலமைப்பின் 10வது பிரிவில் கூறப்பட்டுள்ள அடிப்படை பேச்சுச் சுதந்திரத்தை அப்பட்டமாக
மறுக்கிறது” என விடுதலைக்கான வழக்குரைஞர்கள் என்ற அரசு சாரா அமைப்பு கூறியுள்ளது.

அந்த அமைப்பில் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் படித்த பல மாணவர்களும் அங்கம் பெற்றுள்ளனர். “மலேசியாவின் உருமாற்றத்துக்கு தேவையான” கல்விச் சுதந்தரம் கட்டுப்படுத்தப்படுவது குறித்து அது அச்சம் தெரிவித்தது.

அப்துல் அஜிஸின் அறிக்கை அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக நலன்களுக்கு எதிரானதாக
இருந்ததால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக என அந்த பல்கலைக்கழகம் கூறியுள்ள காரணம்
பொருத்தமற்றது என பிஎஸ்எம் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் கூறினார்.

“ஆளும் கட்சியை ஆதரித்தால் மட்டுமே கல்வியாளர்களுடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்
என்ற வலுவான செய்தியை அது வழங்குகிறது,” எனத் தெரிவித்த அவர் அந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பினார்.

நேற்று அமைக்கப்பட்ட 10,000 mahasiswa menyokong penuh Profesor Dr Abdul Aziz Bari என்னும்
பேஸ் புக் பக்கம் இன்று காலை வரை 9,164 பேரைக் கவர்ந்துள்ளது.

அதே வேளையில் Kami Bantah Penggantungan Dr Aziz Bari என்னும் பேஸ் புக் பக்கத்தில் 5,500
பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

துணை அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர்

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை குறித்து உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

“அந்த விவகாரம் மீது நான் கவலை அடைந்துள்ளேன். நான் அப்துல் அஜிஸ் சொல்வதை எல்லாம்
ஒப்புக்கொள்வதில்லை. அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருக்கிறது. ஆகவே அப்துல் அஜிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது,” என அவர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் சைபுதின் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழகத்திடமிருந்து ஒர் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்த சட்டப் பேராசியருக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டுள்ளது பற்றிக்
குறிப்பிட்ட சைபுதின் “அது அவர்களுடைய உரிமை” என்றார்.

இளைஞர், விளையாட்டுத் துணை அமைச்சர் கான் பிங் சியூ-வும் அந்த விவகாரம் குறித்து தமது
கவலையைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“நான் பேராசிரியர் அஜிஸ் பேரி-யின் பல கருத்துக்களை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும்
அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பட்டதாரி என்ற முறையில் அவரது இடைநீக்கம் எனக்கு கவலை அளிக்கிறது.” என அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய
விவகாரத் துறை நடத்திய சோதனை மீது வெளியிடப்பட்ட அரச கட்டளை தொடர்பில் அப்துல் அஜிஸ் தெரிவித்த கருத்துக்கள் பற்றி விசாரணை நடைபெறுவதை ஒட்டி அவர் இடைநீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.

அவர் அக்டோபர் 25ம் தேதிக்குள் காரணம் கோரும் கடிதத்துக்கு பதில் அளிக்க வேண்டும்.