ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

May day 1இன்று  பிற்பகல்  டத்தாரான்  மெர்டேகாவைச்  சுற்றியுள்ள  தெருக்கள்  எல்லாம்  மக்கள் வெள்ளத்தில்   மூழ்கி  இருந்தன. பல்லாயிரக்கணக்கான  மக்கள் மே  தினத்தில்  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த  பேரணியில்  கலந்துகொண்டு  பொருள், சேவை  வரிக்குத்  தங்கள்  எதிர்ப்பைக்  காட்டிக் கொண்டனர்.

மாலை  4  மணி  அளவில்  சுமார்  50,000 பேர்  அங்கு  திரண்டிருக்கலாம். மழை  பெய்யப்போவதாக  வானம்  மிரட்டிக்  கொண்டிருந்த  போதும் அதைப்  பற்றிக்  கொஞ்சமும்  கவலைப்படாமல்  மக்கள்  ஆர்வத்துடன்  பேரணியில்  பங்கெடுத்துக்  கொண்டார்கள்.

M1 arulபேரணியில்  கலந்துகொண்டவர்கள்  முன்னதாக  கேஎல்சிசி,  சோகோ,  டத்தாரான்   மே  பேங்க்,  ஜாலான்  ராஜா  லாவுட்  ஆகிய  இடங்களில்  ஒன்றுதிரண்டனர். பின்னர்,  அங்கிருந்து  ஜாலான்  ராஜாவுக்கு  நடந்தே  சென்றனர்.

வழி  நெடுகிலும்  போக்குவரத்து  போலீசார்,  போக்குவரத்தைக்  கட்டுப்படுத்தி  அவர்கள்  நடந்துசெல்ல  வழி  அமைத்துக்  கொடுத்தார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்பு 1994-இல் தோட்ட மக்களுக்கு மாதச் சம்பளம் கோரி முதன் முதலாக மெர்டேக்கா சதுக்கத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்களை கொண்டு மே தின ஊர்வலம் நடத்திய அருட்செல்வன், செல்வம், மருத்துவர் ஜெயகுமார் தேவராஜ், ராணி ராசையா, சரஸ்வதி போன்றோர் இன்றும் தொடர்ந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுடன் பாக்காத்தான் அரசியல் கட்சிகள் உட்பட 91 சமூக இயக்கங்கள் இந்த மாபெரும் பேரணிக்கு ஆதரவு நல்கின.

Ambiga Segaran பேரணி கேஎல்சிசி-யில் இருந்து பயணத்தை துவங்குவதற்கு முன் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்காக மக்களின் முன் அருட்செல்வன், அம்பிகா போன்றோர் உணர்வு பொங்கும் விவாதங்களை முன்வைத்து மக்களின் நலன் கருதி மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தினர். அதன் பின் இவ்வாண்டு மே தின பிரகடனம் கோரிக்கைகளாக வாசிக்கப்பட்டு பலத்த கரவொலிகளுக்கிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் பிரேமர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுள்ள செல்லம்மா தான் பலமுறை மேதின பேரணிகளில் கலந்து கொண்டுள்ளதாக கூறினார். “போராடினோம், சொந்த வீடு கிடைத்தது” என்றவர், “சாவுற வரைக்கும் நான் தொழிலாளர்களுக்காக நடப்பேன்” என சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.

M1 Declaration