மலேசியா-பர்மா கைதிகள் பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு கூடுகிறது

குடி நுழைவுக் குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பர்மியக் குடி மக்களை அவர்களுடைய
சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் திட்டத்தைக் கைவிடுமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களும் கேட்டுக் கொண்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு அவற்றில் வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட ஆயிரம் பர்மிய மக்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை கடந்த வாரம் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அறிவித்தார்.

அதே வேளையில் அதற்கு ஈடாக பர்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில மலேசியர்கள்
மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

“பர்மாவிலிருந்து தப்பி வந்த அந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அந்த இராணுவ
ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் நாம் அந்தப் பரிவர்த்தனையைத்
தொடரக் கூடாது,” என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் கூறினார்.

அகதிகளுக்கான ஐநா நிறுவனமும் அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

“அகதிகளும் அடைக்கலம் நாடுவோரும் மனித உரிமை அபாயத்தில் உள்ள தங்கள் நாடுகளுக்குத்
திருப்பி அனுப்பப்படக் கூடாது,” என மலேசியாவுக்கான அந்த நிறுவனத்தின் பேச்சாளர் யாண்டி
இஸ்மாயில் கூறினார்.

மலேசியா இவ்வாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் சர்ச்சைக்குரிய அகதிகள் பரிவர்த்தனை
உடன்பாட்டைச் செய்து கொண்டது. ஆனால் படகு மக்களுடைய தலைவிதி குறித்த கவலையை
அடிப்படையாகக் கொண்டு அந்த ஒப்பந்தத்தை மனித உரிமைப் போராட்ட அமைப்புக்கள் எதிர்த்தன.

இறுதியில் ஆஸ்திரேலிய நீதிமன்றமும் அந்த உடன்பாட்டை நிராகரித்து விட்டது.
அகதிகளுக்கான நிலையை உறுதி செய்யும் 1951ம் ஆண்டு ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடாதது அதற்கு காரணம் என நீதிமன்றம் கூறியது. அந்த ஒப்பந்தம் அகதிகளுடைய உரிமைகள், கையெழுத்திடும் நாடுகளுடைய சட்டப்பூர்வ கடமைகள் ஆகியவற்றை நிர்ணயம் செய்கின்றது.

-ஏஎப்பி