சிறீலங்கா குறித்து ஆஸ்திரேலியாவில் மாநாடு

அக்டோபர் 28-ம் நாள் வெள்ளிக்கிழமை இன்று ஆஸ்திரோலியாவின் பேர்த் நகரில் 22-வது காமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி அக்டோபர் 30-ம் நாள்வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 20-ம் நாள் வியாழக்கிழமை, நேற்று உலகத்தமிழ் பேரவை மற்றும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்தும் சிறீலங்கா குறித்த மாநாடு ஒன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பிரதான ஊடகங்களும் சிறீலங்கா குறித்த செய்திகளை முக்கியமாக வெளியிட்டுவரும் நிலையில் இம்மாநாடு முக்கியம் வாய்ததாக கருதப்படுகின்றது.

சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஐபக்சே, சிறீலங்காவின் ஆஸ்திரேலியாவிற்கான தூதுவர் முன்னாள் கடற்படைத் தளபதி திசரா சமரசிங்க, சிறீலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதி பாலித கோகனா ஆகியோருக்கு எதிராக போர்க்குற்றச் சாட்டுகள் சுமத்துப்பட்டுள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுகின்றது.

இம்மாநாட்டில் முக்கியமான பலர் சிறீலங்கா குறித்து கருத்துரைகளை வழங்கவுள்ளனர். பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி, பேராசிரியர் ஜேக் லிஷ், டாக்டர் கிரகாம் தொம், பீற்றர் ஆடட், புறுஸ் கேய்க், வணபிதா ஜான் பார், முன்னாள் ஆஸ்திரேலிய அதியுயர் நீதிமன்ற நீதிபதி ஜான் டாவுட், பேராசிரியர் ஐவன் சியரர், ஆகிய முக்கிய ஆஸ்திரேலிய மற்றும் அனைத்துலக பிரிதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தாயகத்தில் இருந்து தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது தாயகத்தில் அதற்கு சாட்சியாக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மீனா கிருஸ்ணமூர்த்தி, குட்டிமணிக்குப்பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அப்துல் காதர், மலேசியா மக்கள் பிரதிநிதிகளான சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செனட்டர் ராமகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஐகாரி அப்துல், மனோகரன் ஆகியோர் எனப் பெருந்திரளான பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மூன்று கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வது மேலும் வலுச்சேர்க்கும் விடயமாகும். அதிலும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற மனித உரிமைகளுக்கான குழுவின் தலைவரான ஆளும் கட்சி உறுப்பினர், பிரதித் தலைவரான எதிர்க்கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர்களான எதிர்கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா இமானுவேல் அடிகளார், பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உட்பட பல தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர். மாநாடு நான்கு அமர்வுகளாக நடைபெற்றது.