யூஐஏ பள்ளிவாசலிலிருந்து பிகேஆர் இளைஞர் தலைவர் ‘இழுத்துச் செல்லப்பட்டார்’

ஆர்ப்பாட்டம் நிகழ்வதற்கு முன்னதாக யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலில் பிகேஆர் இளைஞர் தலைவர் ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் வெள்ளிக் கிழமை தொழுகையில் ஈடுபடுவதிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

யூஐஏ பாதுகாவலர்கள் தம்மைப் பிடித்துக் கொண்டு கறுப்பு நிற புரோட்டோன் ஷத்திரியா கார் ஒன்றில் ஏற்றி பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் கொண்டு சென்றதாக அவர் அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மலேசியாகினியிடம் கூறினார்.

தொழுகைக்கு முந்திய கடமைகளை தாம் முடித்துக் கொண்டிருந்த போது 15 பேர், (சிலர் யூஐஏ
சீருடையில் சிலர் சாதாரண உடையில்) தம்மைத் தடுத்து நிறுத்தியதாக அந்த பல்கலைக்கழகத்தின்
முன்னாள் மாணவருமான ஷாம்சுல் கூறினார்.

“தொழுகைக்கான இரண்டாவது அழைப்பு ஒதப்பட்டு விட்டதால் முதலில் தொழுகை நடத்த
விரும்புவதாக அவர்களிடம் கூறினேன். ஆனால் நான் அவ்வாறு செய்ய முடியாது என்றும் தாங்கள்
கூட தொழுகையில் ஈடுபட முடியவில்லை என்றும் அவர்கள் என்னிடம் கூறினர்,” என்றார் அவர்.

தாம் தொழுகையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்திய போதிலும் அவர்கள் விட்டுக் கொடுக்க மறுத்து விட்டனர். இறுதியில் அவர்கள் “தம்மைத் தூக்கிக் கொண்டும் இழுத்துக் கொண்டும் காருக்குச் சென்றதாக” ஷாம்சுல் சொன்னார்.

சாதாரண உடையில் இருந்தவர்கள் அவரிடம் எந்த அடையாள அட்டையையும் காட்டவில்லை.
அவரிடம் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டனர்.

‘நான் குறி வைக்கப்பட்டேன்’

“தமது முன்னாள் விரிவுரையாளருமான அந்தப் பல்கலைக்கழகத் தலைவரை சந்திக்க வேண்டும் என்று கூட நான் கேட்டுக் கொண்டேன். ஆனால் பாதுகாவலர்கள் தங்களுக்கு “மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாகக் அவர்கள் கூறிக் கொண்டனர்.”

அவர்கள் அடுத்து என்னை ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமான் மெலேவாருக்கு கொண்டு சென்றனர். நான் தொழுகையில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசல் ஒன்றில் இறக்கி விடுமாறு நான் கேட்டுக் கொண்டேன்,” என ஷாம்சுல் சொன்னார்.

தொழுகைக்கு பின்னர் அந்த அரசியல்வாதி தமது உதவியாளர் ஒருவரை அழைத்து மோட்டார்
சைக்கிளில் எந்தப் பிரச்னையுமின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் மீண்டும் நுழைந்தார்.

“அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் அங்கு சென்றடைந்த நேரத்தில்
அவர்கள் கலையவிருந்தனர்..”

யூஐஏ வளாகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஒரே நபர் ஷாம்சுல் இஸ்காண்டார்
ஆவார். பொது மக்களும் ஊடக நிருபர்களும் பல்கலைக்கழக நுழைவாயிலில் நிறுத்தப்பட்டு விட்டனர்.

“நான் ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தக் கூடாது என அவர்கள் விரும்பியதால் என் மீது குறி
வைக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்,” என அவர் சொன்னார்.

தமது பேராசிரியரான அப்துல் அஜிஸ் பேரி-யுடன் ஒருமைப்பாட்டைக் காட்ட விரும்பியதால் அங்கு
சென்றதாக ஷாம்சுல் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட கட்டளை ஒன்றின் மீது கருத்துக் கூறியதற்காக அந்தக் கல்வியாளரை இடைநீக்கம் செய்வதென பல்கலைக்கழகம் முடிவு செய்ததை எதிர்த்து கிட்டத்தட்ட 700 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அந்த அரச கட்டளை, ஆகஸ்ட் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில்
நிகழ்ந்த விருந்து நிகழ்வில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்திய சோதனை
சம்பந்தப்பட்டதாகும்.

அஜிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களும் வழக்குரைஞர்களும்
கல்வியாளர்களும் அரசியல் களத்தில் இரு தரப்பையும் சேர்ந்த அரசியல்வாதிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அஜிஸ் யூஐஏ தமக்கு கொடுத்துள்ள காரணம் கோரும் கடிதத்திற்கு அக்டோபர் 25ம் தேதிக்குள் பதில்
சொல்ல வேண்டும்.