அம்பிரின்: ஏஜியின் அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும்

ஆடிட்டர் ஜெனரலின் 2010 ஆம் ஆண்டிற்கான அறிக்கை திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று ஆடிட்டர் ஜெனரல் அம்பிரின் புவாங் கூறினார்.

அதே நாளில் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினர்களுக்கும் அவ்வறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கணக்காய்வு அறிக்கைக்கு கருவூலம் அளித்துள்ள விளக்கங்களும் அறிக்கையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படும் என்று அவர் கோலாலம்பூரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

“2010 இல், ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அதே தினத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டிற்கும் சமமான செய்தி வெளியீடு இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டது.

“1982 ஆம் ஆண்டிலிருந்து ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக முதலில் அமைச்சரவையிடம் அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தேவைப்படும் போது அரசாங்கம் விளக்கம் அளிப்பதற்கு ஏதுவாக எழுப்பப்படும் பிரச்னைகளை அமைச்சரவை தெரிந்து வைத்திருப்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது”, என்றாரவர்.

“தேசிய அல்லது மாநில அறிக்கைகளில்  திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்பதை தேசிய ஆடிட் இலாகா வலியுறுத்த விரும்புகிறது”, என்றும் அவர் கூறினார்.

2012 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட போது ஆடிட்டர் ஜெனரலின் 2010 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்களில் சிலர் கேள்வி எழுப்பினர்.

-பெர்னாமா