துணை அமைச்சர்: அஜிஸ் பேரி-யின் இடைநீக்கத்தை மீட்டுக் கொள்ளுங்கள்

சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி-யின் இடைநீக்கத்தை மீட்டுக் கொள்ளுமாறு உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா, யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத் தலைவர் ஸாலேஹா கமாருதினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஸாலேஹாவுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் அந்த இடைநீக்கம் “பாதகமானது” என சைபுதின் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி மலேசியாகினிக்கு தெரிய வந்தது.

“அந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் கூறினாலும் அஜிஸ் குற்றவாளி எனக் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதால் அந்த நடவடிக்கை தார்மீக ரீதியிலும் அறிவாற்றல் அடிப்படையிலும் தவறானது.”

“நீங்கள் அந்த இடைநீக்கத்தை மீட்டுக் கொள்வீர்கள் எனவும் நேற்று அந்த இடைநீக்கத்தை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள் எனவும் நான் நம்புகிறேன்”, என அவர் சொன்னார்.

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய சர்ச்சை மீது சிலாங்கூர் சுல்தான் அண்மையில் வெளியிட்ட கட்டளை மீது கருத்துக் கூறியதற்காக அப்துல் அஜிஸை அவரது விரிவுரை நிகழ்த்தும் கடமைகளிலிருந்து இடை நீக்கம் செய்ததுடன் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அந்த அரச கட்டளையை “வழக்கத்துக்கு மாறானது” என்றும் “பொருத்தமற்றது” என்றும் வருணித்த அப்துல் அஜிஸ், எத்தகைய அரசத் தலையீடும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் எனக் கூறினார்.