சரவாக் திட்டங்கள்: அன்வார் குற்றசாட்டை புத்ராஜெயா நிராகரிக்கிறது

சரவாக்கிற்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 310 திட்டங்களில் 92 விழுக்காடு இன்னும் தொடங்கப்படவில்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியிருப்பதை கூட்டரசு அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அக்டோபர் 20ம் தேதி வரையில் மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 228 திட்டங்கள் அல்லது 74 விழுக்காடு முடிக்கப்பட்டுள்ளதாக இயற்கை வள, சுற்றுச் சூழல் அமைச்சர் டக்ளஸ் உகா எம்பாஸ் கூறினார்.

13 விழுக்காடு அல்லது 41 திட்டங்கள் அமலாக்கப்படுவதாகவும் 13 விழுக்காடு அல்லது 41க்கும் மேற்பட்ட திட்டங்கள் அமலாக்கப்படுவதற்குக் காத்துக் கொண்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் வாக்குறுதி கொடுத்த திட்டங்களில் 92 விழுக்காடு இன்னும் தொடங்கப்படவே இல்லை என கடந்த வியாழக்கிழமை அன்வார் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய கருத்துக்கள் மக்களைக் குழப்பும் நோக்கத்தைக் கொண்டவை என உகா இன்று கூச்சிங்கில் நிருபர்களிடம் கூறினார்.

அத்துடன் மொத்த திட்டங்களில் 4 விழுக்காடு மட்டுமே டெண்டர் முறையில் வழங்கப்பட்டதாக அன்வார் சொல்வதும் பொய் என்றும் 95 விழுக்காடு திட்டங்கள் டெண்டர் முறையில் கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைப்புக் குழு

உகா, அந்த 310 திட்டங்களையும் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். சிறப்புத் திட்டங்கள் மீதான ஒருங்கிணைப்புக் குழு அந்தத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் உறுதி அளித்தார். பிரதமரும் துணைப் பிரதமரும் அறிவிக்கும் (மக்களுடன் நடந்து செல்லும் நிகழ்வுகளில்) திட்டங்களின் அமலாக்கத்தைப் பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

“நாங்கள் அடிக்கடி கூடுகிறோம். இது வரை ஏழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவை அமலாக்கத்துக்கு முந்திய பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்த்துள்ளன.”

நிலத்தை கையகப்படுத்துவது, குத்தகையாளர்களின் தாமதம், துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்னைகள் ஆகியவை அடையாளம் காணப்பட்ட சில பிரச்னைகளில் அடங்கும் என உகா மேலும் சொன்னார்.

அத்துடன் அந்த ஒருங்கிணைப்புக் குழு களத்தில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அதில் ஸ்ரீ அமான் மருத்துவமனைக்கான புதிய இடத்தைப் பார்வையிட்டதும் அடங்கும். கடந்த ஏப்ரல் மாதம் சரவாக் தேர்தல்களுக்கு முன்னர் பிரதமர் வாக்குறுதி அளித்தவாறு ஸ்ரீ அமானுக்கு இரண்டு புதிய நிபுணத்துவ மருத்துவர்களுடைய சேவைகள் கிடைத்துள்ளன.

20.4 ஹெக்டர் நிலத்தில் 200 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய ஸ்ரீ அமான் மருத்துவமனை கட்டப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உகா அறிவித்தார். அது 2015ம் ஆண்டு தயாராகி விடும்.

பல்வேறு அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக ஒருங்கிணைப்புக் குழு பெத்தோங், காப்பிட் ஆகிய இடங்களுக்கும் சென்றுள்ளதாக அந்த அமைச்சர் தெரிவித்தார். விரைவில் அது மாருடி, பெலாக்கா ஆகியவற்றுக்கும் செல்லும். அங்கு ஆயுதப்படைகள் மேற்கொண்டுள்ள இரண்டு சாலைத் திட்டங்களையும் அது பார்வையிடும்.

“அன்வாருடைய பொறுப்பற்ற அறிக்கையால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்,” எனக் கூறிய உகா மக்கள் அதற்கு பலியாகி விடக் கூடாது என்றார்.

பெர்னாமா