தேர்தல் சீர்திருத்தம் மீதான உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்து பிஎன்னும் பக்காத்தான் ராக்யாட்டும் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள வேளையில் வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் மேலும் பல குளறுபடிகளை அரசியல் கட்சிகளும் பொது மக்களும் அம்பலப்படுத்தியுள்ளனர்.
புதிதாக பாஸ் ஆதரவாளர் ஒருவர் கெடாவில் இல்லாத மை கார்டு எண்களுடன் பதிவு செய்யப்பட்ட பல வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளார்.
Pengundi PAS Kedah ( கெடா பாஸ் வாக்காளர்) என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள பேஸ் புக் பக்கத்தில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாகப் பெறப்பட்ட தோற்றங்களும் அந்தப் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மூன்று வாக்காளர்களின் மை கார்டு எண்களில் ஏழாவது எட்டாவது இலக்கம் ’00’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. அவ்விரு இலக்கங்களும் மை கார்டு வைத்திருப்பவரின் பிறந்த மாநிலத்தைக் காட்டுகிறது.
மலேசிய மாநிலங்களுக்கும் அந்நிய நாடுகளுக்குமான குறியீடுகளைப் பட்டியலிட்டுள்ள தேசியப் பதிவுத் துறை இணையத் தளத்தில் ’00’ என்னும் குறியீடே இல்லை.
தேசியப் பதிவுத் துறையின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியுடன் தொடர்பு கொள்ளப்பட்ட போது அத்தகைய குறியீடு ஏதும் இல்லை என்று அவர் உறுதி செய்ததுடன் அது குறித்து தமது துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் செய்யுமாறும் நிருபரைக் கேட்டுக் கொண்டார்.
அந்தத் துறையின் இணையத் தளத்துக்கு சென்ற போது அந்த மூன்று மை கார்டுகளுக்கான பதிவே கிடையாது.
வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் முறையில் தேர்தல் ஆணையத் தளத்தில் அந்த மூவர் பற்றி இன்று காலை கிடைத்த விவரங்கள்:
1. Hasrullizam bin Halim
MyKad no: 800604002563
Voting constituencies: Bukit Pinang (state), Pokok Sena (Parliament)
2. Rosmadi bin Chik
MyKad no: 801111002544
Voting constituencies: Kota Siputeh (state), Jerlun (Parliament)
3. Shapiza binti Ghazali
MyKad no: 811020002568
Voting constituencies: Bukit Lada (state), Pokok Sena (Parliament)
ஒவ்வொரு வாக்காளர் பதிவும் தேசியப் பதிவுத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள அலிஸ் என்னும் முறையில் சோதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆகவே அந்த மூவருடைய மை கார்டு எண்கள் செல்லாததாக இருந்தும் வாக்காளர் பட்டியலில் அந்த மூன்று வாக்காளர்களும் எவ்வாறு பதிவு செய்யப்பட்டனர் என்பது தெரியவில்லை.
“அவை சோதிக்கப்பட்டிருந்தால் ’00’ குறியீட்டைக் கொண்ட மை கார்டை உறுதி செய்திருக்காது. அது எழுத்தர்களின் தவறு என்றால் (அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறாக இருந்தால் தவிர) ஏன் இவ்வளவு பேர் ’00’ குறியீட்டுடன் உள்ளனர்,” என அந்த பாஸ் கெடா வாக்காளர் வினவியுள்ளார்.
“தேர்தல் ஆணையமும் தேசியப் பதிவுத் துறையும் உருப்படியான விளக்கத்தைத் தரும் என நான் நம்புகிறேன். தேசியப் பதிவுத் துறையில் சோதனை செய்தால் அங்கு பதிவுகளே இல்லை. ஆகவே அவர்கள் எங்கிருந்து வந்தனர் ? புளுட்டோ கிரகத்திலிருந்தா ?”
32 நுழைவுகள் ‘தூய்மை செய்யப்பட்டுள்ளன’
வக்காளர் பட்டியலில் இரட்டை அடையாளங்களைக் கொண்டவர்கள் எனக் கூறப்படும் 32 கெடா வாக்காளர்களுடைய கணினி திரைத் தோற்றங்களும் பேஸ் புக் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்று காலை தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் மலேசியாகினி சோதித்த போது அந்த இரட்டை அடையாளம் காணப்படவில்லை.
தேசியப் பதிவுத் துறை வழங்கும் தகவல் அடிப்படையில் இரட்டைப் பதிவுகள் உட்பட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அன்றாடம் தூய்மைப்படுத்தி வருவதாக அப்துல் அஜிஸ் சொன்னார்.