அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் நிறைவு பெற வேண்டும் என அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முடியாது என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
“அவர்கள் எங்களை நெருக்க முடியாது. அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்கள் சிறுபான்மை. இது அரசாங்கத்தின் உரிமை. அவர்கள் எங்களுக்கு உத்தரவிடக் கூடாது,” என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணிகளை முடித்துக் கொண்டு அது பரிந்துரைக்கும் சீர்திருத்தங்கள் அமலாக்கப்படும் வரையில் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நேற்று பக்காத்தான் ராக்யாட் எம்பிக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீது தேர்வுக் குழு வழங்கும் யோசனைகள் “கூடிய விரைவில்” அமலாக்கப்படுவதை உறுதி செய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என நஸ்ரி வாக்குறுதி அளித்தார்.
“2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் நிறைவுக்கு வருகிறது என்னும் அடிப்படையில் நாம் வேலை செய்ய வேண்டும். அதற்காக நாம் 2013ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்பதில்லை. என்றாலும் கூடிய விரைவில். சாத்தியமானால் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நாம் எல்லாவற்றையும் அமலாக்கி விடலாம்,” என்றார் அவர்.
குழுவுக்கு எதிர்த்தரப்பு தலைமை ஏற்காது
தேர்தல் சீர்திருத்தங்கள் மீது ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுவை அமைப்பது என அமைச்சரவை முடிவு செய்ததாக நஸ்ரி அதற்கு முன்னர் கூறினார்.
அதில் ஐவர் அரசாங்கத்தை சேர்ந்தவர்களாகவும் மூவர் எதிர்த்தரப்பைச் சார்ந்தவர்களாகவும் ஒரு சுயேச்சை உறுப்பினராகவும் இருப்பார்.
அந்தக் குழுவுக்குத் தான் தலைமை தாங்க வேண்டும் என எதிர்த்தரப்பு விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
“ஏற்கனவே அமைக்கப்பட்ட தேர்வுக் குழுக்களைப் பார்க்கும் போது அனைத்தும் நிர்வாகத்தைச் சார்ந்தவர்களே தலைமை தாங்கியுள்ளனர். அரசாங்கம் வழங்கும் வசதிகளை பயன்படுத்திக் கொள்வதே அதன் நோக்கமாகும். எடுத்துக்காட்டுக்கு பொது விசாரணை ஒன்றின் போது நாம் அரசாங்கத் துறைகளை நம்பியிருக்க வேண்டிய தேவை ஏற்படலாம்,” என நஸ்ரி விளக்கினார்.
நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு எல்லாக் கட்சிகளும் தங்களது அடித்தள வேலைகளைத் தொடங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அக்டோபர் 3ம் தேதி நாங்கள் (அமைச்சரவை) தேர்வுக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் என நம்புகிறோம். அதனால் அது உடனடியாகத் தனது பணிகளைத் தொடங்க முடியும்.”
“சாத்தியமானால் அடுத்த ஆண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், குழு பரிந்துரை செய்யும் போல நடப்புச் சட்டங்களுக்கான திருத்தங்களை நாங்கள் தாக்கல் செய்ய முடியும்,” என்றும் பிரதமர் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.