துருக்கியில் நிலநடுக்கம்; 1,000 பேர் பலி

துருக்கியின் தென்கிழக்கு மாகாணம் ஒன்றில் நேற்று நிகழ்ந்த 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வான் இலி மாகாணத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில் வான் நகரில் 10 அடுக்கு மாடிக் கட்டடங்களும் அருகில் உள்ள எரிக்ஸ் மாவட்டத்தில் 25-ல் இருந்து 30 கட்டடங்களும் இடிந்து விழுந்ததாக துணை தலைமையமைச்சர் பெசிர் அட்டாலாய் தெரிவித்தார்.

இக்கோரச் சம்பவத்தில் 500-ல் இருந்து 1,000 பேர் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு நிலநடுக்கவியல் நிறுவன இயக்குனர் முஸ்தபா எர்டிக் தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் பீதியில் தெருக்களில் குவிந்தனர்.

எரிக்ஸ் மாவட்ட மேயர் ஜூல்பிகர் அரபோகு கூறுகையில், “நிறைய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன; பலர் பலியாகியுள்ளனர். எனினும், எத்தனை பேர் என்பது தெரியவில்லை. அவசர மீட்புப் பணிகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

வான் நகரில் மீட்புப் படையினர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள நபர்களையும் பலியானவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.