காலிட் கட்சியின் உத்தரவுக்கு பணிய வேண்டும், லீ

 

boardபதவியை காலி செய்யுமாறு கட்சி விடுத்துள்ள உத்தரவுக்கு பணியுமாறு சிலாங்கூர் மாநில காஜாங் தொகுதி சட்டமன்ற  முன்னாள் உறுப்பினர் லீ சின் சியா மந்திரி புச்சார் காலிட்டை வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் உத்தரவுக்கு பணிந்து தாம் சட்டமன்ற உறுப்பினர் பதவி துறந்ததைச் சுட்டிக் காட்டிய லீ, காலிட் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இவ்வாண்டு ஜனவரியில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்மை சந்தித்த பின்னர் அவர் பதவி துறக்க வேண்டும் என்பது காலிட்டுக்கு தெரியும் என்று லீ கூறினார்.

“பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி அவருக்கு பதிலாக நியமிக்கப்படாத வரையில் அவர் அதைச் (பதவி துறப்பை) செய்ய ஒப்புக் கொண்டார்”,என்று லீ மலேசியகினியிடம் கூறினார்.

சிலாங்கூரில் பக்கத்தான் ஆட்சியைப் பிடித்த ஓர் ஆண்டிற்குப் பின்னர், காலிட்டின் “கீழ்ப்படியாமை” 2009 ஆம் ஆண்டில் தொடங்கிற்று என்றும்PKR - Kajang Lee அதன் பின்னர் கட்சியின் முடிவுகளைப் புறக்கணிக்கும் அவரது முரட்டுத்தனம் வழக்கமாயிற்று என்று லீ மேலும் கூறினார்.

“உண்மையில், காலிட்டின் கீழ்ப்படியாமை மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது”, என்று அவர் மேலும் கூறினார்.

இதர பிகேஆர் தலைவர்கள் ஊழல்வாதிகள் என்று கூறுவது காலிட்டிற்கு வழக்கமாக இருந்தது. அது மற்றவர்களுக்கு கோபத்தை மூட்டியது என்று அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

“அவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்று  வர்ணிக்க அவர் முயன்றது எங்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கியது. எங்களிலும் சுத்தமானவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, அவர் இவ்வாறு செய்தது தவறாகும்”, என்று லீ ஆத்திரப்பட்டார்.

லீயை பொறுத்தவரையில், பக்கத்தான் கிரீடத்தின் விலைமதிப்பற்ற கல்லான சிலாங்கூரை வழிநடத்துவதற்கு ஒரு சிறந்த தலைவரை பெறுவதற்கு காஜாங் இடைத் தேர்தல் அவசியமாயிற்று.