சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பிகேஆர் கட்சியிலிருந்து இன்று நீக்கப்பட்டதிலிருந்து எழுந்துள்ள பெரும் கேள்வி இப்போது கட்சி இல்லாத சிலாங்கூர் மந்திரி புசார் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதாகும்.
சட்டமன்றத்தில் அவர் தொடர்ந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருக்கும் வரையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது மந்திரி புசார் என்ற அவரது தகுதியை பாதிக்காது என்று கூறுகிறார் அரசமைப்பு சட்ட வழக்குரைஞர் ஸயாரெட்ஸான் ஜோஹன் கூறுகிறார்.
பக்கத்தான் அடுத்த சில தினங்களில் அதன் 43 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை, காலிட்டின் விசுவாசிகள் உட்பட, தன்பக்கம் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் என்று நம்பப்படுகிறது.
காலிட்டை நீக்க பக்கத்தானுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்பதில் அதற்கு திடநம்பிக்கை இருக்குமானால், அது மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரலாம் என்றும் ஜோஹான் கூறினார்.
ஆனால், இதை முறியடிக்கும் வகையில் காலிட் சட்டமன்றத்தை கலைக்கும்படி சிலாங்கூர் சுல்தானை கேட்டுக்கொள்ளலாம். இது ஒரு புதுத் தேர்தலுக்கு வகை செய்யும்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் அல்லது பெரும்பான்மையான ஆதரவு ஆகிய எதுவும் இல்லாமலும் சட்டமன்றத்தை கலைப்பதற்கு வேண்டுகோள் விடுக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
காலிட் இதனைச் செய்ய விரும்பினால், அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மந்திரி புசார் காலிட்டுடன் சுல்தான் நாளை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த பின்னர் சுல்தான் இரு வார வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக மலேசியாகினி அறிந்துள்ளது.
காலிட் இப்ராகிம் நாளை சட்டமன்றத்தை கலைக்க விரும்பினால், சுல்தானுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக்கிறது. மந்திரி புசாரின் கோரிக்கையை வெறுமனே அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசமைப்புச் சட்ட வல்லுனரான அப்துல் அசி பாரி கருத்துரைத்தார்.
“ஒரு மந்திரி புசார் நீக்கப்பட்டார் (கட்சியிலிருந்து) என்றால், அது அவர் ஆதரவை இழந்து விட்டார் என்பதாகும்.
“சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு மாற்றாக, சுல்தான் காலிட்டை சட்டமன்றத்திற்கு சென்று அங்கு அவருக்கு ஆதரவு இருக்கிறதா என்பதை தெரிநிந்து கொள்ளுமாறு கூறவேண்டும்”, என்று அசிஸ் பாரி மலேசியாகினியிடம் கூறினார்.
சட்டமன்றத்தில் அப்துல் காலிட்டிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று தீர்மானித்து விட்டால், அவர் பதவி துறக்க வேண்டும் அல்லது சுல்தான் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அசிஸ் பாரி மேலும் கூறினார்.
அனைத்து எதிர்ப்புகளையும் தகர்த்தெரிந்து விட்டு அம்னோ மற்றும் அவரது விசுவாசிகளின் ஆதரவோடு காலிட் பெரும்பான்மையை நிலைநிறுத்திக் கொண்டால் என்ன ஆகும்?
“அப்போது காலிட் காலிட் மந்திரி புசாராக தொடரலாம். ஆனால், அது இனிமேலும் பக்கத்தான் ரக்யாட் அரசங்கம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்”, என்றார் அசிஸ் பாரி.
“பக்கத்தான் ரக்யாட் மூலம் அரசாங்கம் அமைக்கப்பட்டதால் அவரது ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதோடு காலிட் அவரது ஆட்சிக்குழு உறுப்பினர்களின் புதிய பட்டியனை (சுல்தானிடம்) தாக்கல் செய்ய வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.
பக்கத்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான விவாதங்கள் தொடங்கி விட்டன.
“காலிட்டின் எம்பி தகுதியை நாங்கள் இதற்குமேல் அங்கீகரிக்கவில்லை. பிகேஆர் ஆதரவற்ற எம்பியுடன் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று டிஎபி சிலாங்கூர் தலைவர் டோனி புவா மலேசியாகினியிடம் கூறினார்.
56 இருக்கைகளைக் கொண்ட சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பாஸ் மற்றும் டிஎபி தலா 15 இருக்கைகளையும், பிகேஆர் 14 இருக்கைகளையும், அம்னோ 2 இருக்கைகளையும் வைத்துள்ளன.
அப்துல் காலிட்டை அகற்றும் முயற்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது பாஸ். ஆகவே, பிகேஆர்-டிஎபி கூட்டு மட்டும் மந்திரி புசாரை மாற்றுவதற்கு போதுமானதல்ல.
இந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிப்பதற்கு இன்னொரு வழியும் உண்டு என்று ஜோஹான் கூறினார். சட்டமன்ற வாக்களிப்பை தவிர்ப்பதற்கான ஒரு மூன்றாவது வழி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து சத்தியபிரமான பிரகடனங்களைப் பெறுவதாகும் என்றாரவர்.
பேராக் மாநில சட்டமன்றத்தின் நம்பிக்கை தீர்மானத்தை பெறாமல் 2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பிஎன் அரசாங்கம் பெடரல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
இது சாத்தியம் என்றாலும், சட்டமன்றத்தின் வாக்கை பெறுவதுதான் அரசியல் முறைப்படி சரியாதாகும் என்பதோடு அதுதான் நன்னெறி வழியாகும் அவர் மேலும் கூறினார்.
இவ்வளவு சிக்கலுக்கு இடையிலும் நான் மந்த்ரி பெசராக பதவியில் இருப்பேன் என்று காலித் சொல்வது வியப்பை தருகிறது! முக்கிய துருப்பு சித்து கை வசம் உள்ளதோ?
தற்போதைய அரசியலில் நடப்பில் நன்னெறியை எதிர்பார்ப்பது நடவாத ஒன்று. அரசியல் ஒரு சாக்கடை என்பது எத்துனை உண்மை.
காலித்தின் தற்போதைய அரசியல் ஆலோசகர் யாரோ?? குட்டையை குழப்பி மீன் பிடிக்கப் போவது சகுனியா அல்லது சாணக்கியனா?? பொறுத்திருந்து பார்ப்போம்!!!.
அப்படியே ஒரு சிக்கல் வந்தால், எந்தந்த பாம்புகள் எந்தந்த புற்றில் உள்ளன என்பது பெரும் கேள்விக்குறியே. அம்னோஅரசியல் சூழ்ச்சியான தன பண பலத்தைக.கொண்டு எல்லாவித அநாகரித்தையும் (திரங்கானுவில் நடந்ததுபோல்) செய்ய முன் வரும்!? மக்கள் கூட்டணி இவை எல்லாவற்றையும் கடந்து வர திட்டத்தை கை வசம் வைத்துள்ளதா?? பரம்பொருளுக்கே வெளிச்சம்!!
சில முக்கிய விஷயங்களை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை. சட்டப்பேரவையில் டான்ஸ்ரீ காலித் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமேயானால், காலித் வெல்லும் சாத்தியங்கள் அதிகம். அவருக்கு PAS கட்சியின் 12ம் அம்னோவின் 12ம் முழு ஆதரவு. PKR ல் இவருக்கு சில பேரும், DAP யில் சில பேரும் உள்ளனர். ஆக, அத்தகைய தீர்மானம் வர வாய்ப்பில்லை. அதேவேளை, சட்டமன்றத்தை கலைக்க யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஏனெனில் பெரும்பாலோர் வீட்டுக்கு போக வேண்டி வரும். இந்த திரிசங்கு நிலையை பக்காத்தான் எப்படி சமாளிக்கப் போகிறதோ தெரியவில்லை.
கலைத்து விட்டால் அப்புறம் அவர் வேலை போய் விடுமே!. அப்புறம் செல்லாக் காசாகி விடுவாரே!. எந்த அறிவாளியும் இந்த மாதிரியான செயலைச் செய்ய மாட்டான். காலிட்டின் ஒரே பிடிமானம் அந்த மலை உச்சியில் அரண்மனையைக் கட்டிக் கொண்டிருப்பவரே!.