தொகுதிப் பரிமாற்றம் கெடா அம்னோவுக்கு சம்மதமே

தலைமை ஒத்துக்கொண்டால் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகளுடன் தொகுதிகளை மாற்றிக்கொள்வதில் மறுப்பில்லை என கெடா அம்னோ தொடர்புக்குழு அறிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் அம்னோ பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எந்த முடிவெடுத்தாலும் அதைப் பின்பற்றத் தயார் என அதன் தலைவர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா கூறினார்.

சிலாங்கூரில் உள்ள தனது தொகுதி ஒன்றுக்குப் பதிலாக கெடா அல்லது பினாங்கில் ஒரு தொகுதியில் போட்டியிட மஇகா விருப்பம் தெரிவித்திருப்பது குறித்துக் கருத்துரைத்த அஹ்மட் பாஷா, அடுத்த பொதுத் தேர்தல் எப்போது என்று தெரியாது என்பதால் அதைப் பற்றி விவாதிக்க அவசரப்பட வேண்டியதில்லை என்றார்.

ஆனாலும், மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தம் விருப்பத்தை வெளிப்படையாகவே தெரிவித்ததை அவர் பாராட்டினார்.

“13வது பொதுத் தேர்தல் முந்திய தேர்தல்களைப்போல் இருக்காது.” அவர் நேற்றிரவு, பாடாங் செராயில் இந்திய சமூக்கத்தைச் சேர்ந்த 300 பேருக்கு தீபாவளியையொட்டி ரொக்கமும் அன்பளிப்புகளும் வழங்கிய பின்னார் செய்தியாளர்களிடம் பேசினார்.

2008 பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிட்ட ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிபெற்றது.

பினாங்கு, கெடா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்தியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்றாலும் அக்கட்சி எந்தவொரு நாடாளுமன்றத் தொகுதியையும் அங்கு பெற்றிருக்கவில்லை என்று பழனிவேல் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவேதான் மஇகா, சிலாங்கூரில் உள்ள காப்பார் தொகுதிக்குப் பதிலாக கெடாவில் பாடாங் செராயில் போட்டியிட  விரும்புவதாக தெரிகிறது.

பாடாங் செராய் இப்போது மசீச-வுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அத்தொகுதிக்குப் பதிலாக சுங்கை பட்டாணி தொகுதியை வழங்கலாம், அங்கு சுமார் 35,000 சீன வாக்காளர்கள் உள்ளனர் என்று கெடா மஇகா தலைவர் ஒருவர் கூறினார்.

மஇகாவின் கோரிக்கை ஏற்கப்பட்டால் கெடா அம்னோ ஒரு தொகுதியை இழக்க நேரலாம்.

ஆனால், தொகுதிகளை மாற்றிக்கொள்வதில் அவசரம் காட்டத் தேவையில்லை என்றே கெடா அம்னோ தொடர்புக்குழுவின் துணைத் தலைவரான முக்ரிஸ் மகாதிரும் கருதுகிறார்.

நேற்று பாடாங் செராய் அருகில் லூனாஸ், பாடாங் தாமான் கூச்சாயில் படாங் செராய் மஇகா இளைஞர் பகுதியின் திறந்த இல்ல உபசரிப்பை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த பின்னர் பேசிய அவர், அவ்விவகாரத்தை பிஎன் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

-பெர்னாமா