அன்யா-வைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் அவருடைய தாயார் ஆராய்கிறார்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் புதல்வரால் மானபங்கப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படத்தில் உள்ள இளம் மாதுவின் தாயார், தமது புதல்வியின் நலனைப் பாதுகாப்பதற்கு எல்லா வழிகளையும் பரிசீலித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

21 வயதான அன்யா ஆன் கோர்க் பற்றிய வதந்திகளைப் பரப்பும் தரப்புக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதும் அதில் அடங்கலாம் என அவரது தாயாரான மெய் சன் கூறினார்.

“அன்யாவின் தாயார் என்னும் முறையில் நான் இத்தகைய அபத்தங்களிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு உள்ள வழிகளை நான் ஆராய்வேன்,” என அவர் சொன்னதாக ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அன்யா முன்பு ஹாங்காங் சதுரங்க வீரராகவும் திகழ்ந்திருக்கிறார். இப்போது அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரை லிம்-மின் பதின்ம வயது புதல்வர் மானபங்கப்படுத்தப்பட்டதாக அம்னோ சார்பு வலைப்பதிவாளர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.

அந்தச் சம்பவத்தினால் லிம்-மின் புதல்வர் ஹெங் ஈ தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறிக் கொண்டனர்.

அந்த சம்பவத்தை மறைப்பதற்கு லிம், அன்யா-வின் பெற்றோருக்கு 200,000 ரிங்கிட் வரையில் கொடுத்ததாகவும் அம்னோ வலைப்பதிவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தகைய சம்பவம் ஏதும் நிகழ்வில்லை என அன்யாவும் லிம்-மும் ஹெங் ஈ தேசிய இடைநிலைப் பள்ளித் தலைமையாசிரியரும் மறுத்துள்ளனர்.

தம்மை அரசியல் ரீதியில் அழிக்க முயலுகின்றவர்கள் தமது பதின்ம வயது வாழ்க்கையை நாசப்படுத்த முயலுவதாக டிஏபி த லைமைச் செயலாளருமான லிம் சாடியுள்ளார். அவர்களுடைய பொய்கள்  “தார்மீக ரீதியில் வெறுக்கத்தக்கது, காட்டுமிராண்டித்தனமானது” என்றும் லிம் வருணித்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக தாம் மலேசியாவுக்குச் செல்லவில்லை என்றும் பினாங்கு பள்ளிக்கூடத்தில் படித்தது இல்லை என்றும் அமெரிக்காவில் வெல்லஸ்லி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியான அன்யா சொன்னார்.

தம்மைப் மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகின்ற சிறுவனைச் சந்தித்ததும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“என் மலேசிய நண்பர் ஒரு நாள் காலையில் எனக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அரசியல் சதித் திட்டம் ஒன்றில் தாம் எப்படியோ பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். திடீரென அந்தத் தகவல் வந்தது,” என அன்யா கூறியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.

அரசியல்வாதிகளுடைய குடும்பங்கள், கறை படிந்த அரசியலில் இழுக்கப்படக் கூடாது. அரசியல் ஆதாயத்துக்காக அவை பயன்படுத்தப்படக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

என்றாலும் அரசியலிலிருந்து குடும்ப உறுப்பினர்களை விலக்கி வைக்கும் கொள்கை, எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கூட்டணிக்கும் பொருந்தும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

அதே வேளையில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின், லிம் மீதான நெருக்குதலைத் தொடர்ந்தார். தமது புதல்வர் ஒன்றும் செய்யவில்லை என லிம் வெறும் மறுப்பை வெளியிடுவது மட்டும் போதாது. அதனை விசாரிக்குமாறு போலீசாரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.