முஹைடின்: நிருபர் என் அறிக்கையைத் “திரித்து” விட்டார்

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருடைய புதல்வரின் தவறான நடத்தை எனக் கூறப்படுவது மீது தாம் வெளியிட்ட அறிக்கை மாற்று செய்தி ஊடகங்களில் ‘திரித்தும்’, ‘தவறாகவும்’ வெளியிடப்பட்டதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார்.

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய முஹைடின் அவ்வாறு கூறினார்.

அதற்கு முன்னார், லிம் குற்றச்சாட்டுக்களை வெறுமனே மறுப்பது மட்டும் குற்றச்சாட்டுக்களிலிருந்து தமது குடும்பத்திரை விடுவிப்பதற்குப் போதாது என முஹைடின் கூறியதாக செய்தி இணையத் தளம் ஒன்றில் வெளி வந்த செய்தி தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் முஹைடினைக் கடுமையாக சாடியிருந்தார்.

அத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை அந்தப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியரும் மாநிலக் கல்வித் துறையும் மறுத்துள்ள வேளையில் அது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதின் மூலம் குற்றச்சாட்டுக்களை கல்விக்கும் இளம் மாணவர்களுடைய நலனுக்கும் பொறுப்பான அமைச்சர் எப்படித் தொடர முடியும் என முஹைடின் பேசிக் கொண்டிருந்த போது இடைமறித்து ஈப்போ தீமோர் எம்பி லிம் கிட் சியாங் வினவினார்.

குற்றச்சாட்டிலிருந்து தமது குடும்ப உறுப்பினரை விடுவிப்பதற்கு அந்த எதிர்க்கட்சித் தலைவருடைய மறுப்பு மட்டும் போதாது, பிரச்னையை தீர்த்துக் கொள்வதற்கு போலீஸ் புகார் அவசியம் என்று முஹைடின் சொன்னதாக நேற்று இணையத் தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

ஆனால் அந்த எதிர்க்கட்சிப் பிரமுகர் குற்றச்சாட்டு மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் கேட்டுக் கொண்டதாக மற்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

“அதுதான் என் நோக்கம். நான் தலையிட விரும்பவில்லை. என் நோக்கத்தைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். என் நோக்கம் மோசமானது அல்ல. வெறுப்புணர்வு ஏதுமில்லை…”