சட்டப் பேராசிரியர் அசிஸ் பாரியின் இடைநீக்கம் அகற்றப்பட்டது

யூனிவர்சிட்டி இஸ்லாம் அந்தராபங்சா (யுஐஎ) அதன் சட்டப் பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரிக்கு அளித்திருந்த இடைநீக்க உத்தரவை இன்று அகற்றியது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

அசிஸ்சின் வழக்குரைஞர் சுல்கார்நெயின் தாம் அப்பல்கலைக்கழத்திடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றதாகவும், அதில் தமது கட்சிக்காரர் நாளை பல்கலைக்கழக சட்டத்துறை  பிரிவின் தலைவரிடம் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இது அப்துல் அசிஸ் பாரி நாளை தமது வேலையைத் தொடங்கலாம் என்பதாகும் என்று அந்த வழக்குரைஞர் கூறினார். ஆனால், முதலில் அவருக்கு எதிரான விசாரணையின் முடிவு என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்துல் அசிஸ் பாரிக்கு எதிரான விசாரணை இன்னும் தொடர்கிறது என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த காரணம் கோரும் கடிதத்திற்கு அப்துல் அசிஸ் அளித்திருந்த பதிலை ஆய்வு செய்வதற்கு பல்கலைக்கழகத்திற்கு நேரம் தேவைப்படுகிறது என்று சுல்கார்நெயின் பெற்ற கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்துல் அசிஸ்சின் பதில் இன்று பிற்பகல் மணி 2.30 க்கு தாக்கல் செய்யப்பட்டது. பதில் அளிப்பதற்கான கடைசி நாள் நாளையாகும். அவரது இடைநீக்கம் அகற்றப்பட்டதாக அறிவிக்கும் தொலைநகல் கடிதம் நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் கிடைத்தது.

பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா மற்றும் பொதுமக்கள் அளித்த அழுத்தம்தான் அந்த இடைநீக்கம் அகற்றப்பட்டதற்கான காரணம் என்று சுல்கார்நெயின் நம்புகிறார்.

“நான் இன்று பேராசிரியரின் அலுவலகத்தில் இருந்தேன். அங்கு பல சுவரொட்டிகளில் தமது கட்சிக்காரருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.