தேன்மொழி : கோமாளியே! உங்களின் தீபாவளி சிந்தனையுண்டோ; பரிசுப் பொட்டலம் கிடைத்திருக்குமே?
கோமாளி : தேன்மொழி, இந்த நூற்றாண்டின் பதினொன்றாவது தீபாவளி இனிமையானது. கல்லுருண்டையை கையில் எடுத்த உலகமும் உருண்டையானது என்ற நினைப்பு எழாமலேயே, கடித்து சுவைப்பதும், நமக்கும் உருண்டைக்கும் இடையே உள்ள போராட்டமும் எவ்வளவு இனிமையானது. மிகவும் இருகியிருக்கும் உருண்டை பிளவு பட்டவுடன் நாவின் வேலை இலகுவாகிவிடுகிறது.
கடிக்க இயலாத வேளையில் அதை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டியும், சுவைத்தும் பின்பு அதை கடித்து உடைப்பதும் நமக்கு இயற்கையாகவே அமைந்துவிடும்.
இருகிப்போயிருந்த வல்லரசுகளை இன்று மக்கள் உடைத்து உலகம் என்பது மக்களுடையது, என்ற நிலையில் இப்புவியில் பிறந்த உயிர்களுக்கே உள்ள நீதியை மீட்க முற்படுகின்றனர்.
உருண்டையான உலகம் உருவானபோது அது யாருடையது என்ற வினாவிற்கு விடையில்லை. நீரும், காற்றும், நிலமும் எல்லையற்று எல்லாமே எவைகளுக்கும் என்பதுதான் நியதி.
ஆயிரம் ஆண்டுகளாக நம் மலை நாட்டின் மண்ணிலே சுவாசித்து விட்டுச் சென்ற காற்றையே நாம் மீண்டும் சுவாசிக்கின்றோம். இந்த நிலத்தில்தான் பிறக்கிறோம், நடக்கிறோம் அடைக்கலமாகிறோம். ஆனால் நாம் போடும் வேடங்கள்தான் மாறுபட்டவை.
ஒருமுறை நமது வாழ்வியலில் நன்றியுள்ள மக்களுக்காக உயிரை தியாகம் செய்ய தருணம் கேட்டு பிச்சையெடுக்க வேண்டும் என்ற நிலையிருந்து (குறல் 780) தன்னலமும் ஆசையும் ஆணவமும் அற்ற நிலையிலே ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்றோம்.
தேன்மொழி, புறமுதுகு காட்டாத தமிழனும் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும் கொண்டிருந்த மரபணுக்களை ஏந்திக்கொண்டிருக்கும் நமக்கு அதை உணர்த்த, உணர எதுவுமே தேவையற்றதாகிவிட்டது. அதுவே விழித்தெழும் என்பது மட்டுமே எஞ்சியுள்ள ஒரே உண்மை.
புதிய பரிணாமத்தில் நம்மை ஆளும் வழிமுறையை நாமே உருவாக்கும் சூழலில், சூதுடன் கவ்வும் நரகாசூரன் புதிய வேடமனிந்து ஆடல் பாடலுடன் பரிசு பொட்டலங்களை பலருக்கு கொடுக்கிறான். நாம் உயிர்வாழ அவைத்தேவை என்ற நிர்ப்பந்தம் உள்ளதை மறுக்க இயலாது. அதேவேளை செல்வம் கொழிக்கும் நம் நாட்டில் ஆளும் வழிமுறையை தேர்வு செய்யும் நாமே எப்படி அந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதுதான், புரிந்தும் புரியாதது. அறிந்தும் அறியாமையானது, தேன்மொழி.
தீபாவளியின் சிந்தனையில் நமது நாட்டின் மக்களோடு மக்களாக இந்நாட்டுக்கு எம் உயிர் சொந்தம் என்ற உரிமையுடன், இந்நாடும் நமக்கு சொந்தமானது என்ற சுய நிர்ணயத்துடன் தீப ஒளியை ஏற்றுவோம். அந்த ஒளியின் வெப்பம் தமிழனின் மரபணுவை தட்டி எழுப்பட்டும்.