ஹிண்ட்ராப் உதயகுமார் விடுதலையானார்

 

UK out from prison1காஜாங் சிறையில் 485 நாட்களைக் கைதியாகக் கழித்த ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் இன்று விடுதலையானார். அவருக்கு வீர வரவேற்பு அளிக்கப்பட்டது.

உதயகுமாருக்கு ஆதரவு தெரிவிக்க காஜாங் சிறைச்சாலையின் முன்பு சுமார் 60 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் அவர்களது அடையாளமான ஆரஞ்ச் வர்ண உடையில் குழுமியிருந்தனர்.

உதயகுமார் சிறைச்சாலை வண்டியில் காலை மணி 9.45 க்கு வெளியில் கொண்டு வரப்பட்டார்.

அவரது ஆதரவாளர்கள் விழாக்கோல அளவில் முழக்கமிட்டு மேள முழக்கத்தோடு அவரை வரவேற்ற போது அவரது துணவியார் எஸ். இந்திரா தேவி கண்ணீர் வழிய, புன்சிரிப்புடன் ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார்.

“நான் முதலில் கூற விரும்புவது,  எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பொதுநலனுக்கான ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒரு விலைUK out from prison2 கொடுக்க வேண்டியுள்ளது”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போது அரசியல்வாதிகளுக்கும் பொதுநல தன்னார்வலர்களுக்கும் எதிராக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் உதயகுமார் விடுதலையாகியுள்ளார்.

இந்தியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்படுகிறது என்று புத்ராஜெயா மீது சாட்டிய குற்றத்திற்காக ஜூன் 5, 2013 இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உதயகுமாருக்கு 30 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த செப்டெம்பர் 17 இல், மேல்முறையீட்டு நீதிமன்றம் அத்தண்டனையை 30 லிருந்து 24 மாதங்களுக்குக் குறைத்து தீர்ப்பளித்தது.