சட்டப் பேராசிரியர் அப்துல் அசீஸ் பேரியின் இடைநீக்கத்தை யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏ) நேற்று ரத்துச் செய்தது. என்றாலும் நிலைமையில் மாற்றமில்லை என்கிறார் பேராசிரியர். சொல்லப்போனால், நிலவரம் மேலும் மோசமடைந்துள்ளது.
“நான் பணியைத் தொடர வேண்டும், வழக்கம்போல் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், என்மீதுள்ள சந்தேகம் இன்னும் போகவில்லை. போலீசின் தொந்திரவு தொடர்கிறது.
யுஐஏ-இன் விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறிய அவர், “பொதுமக்களைத் திருப்திப்படுத்தவே” பணிஇடைநீக்கம் ரத்துச் செய்யப்பட்டது என்றார்.
“இனி, என்ன நடக்கும்? யுஐஏ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போகிறதா?”
அல்லது, அரசநிந்தனை வழக்கு தொடுக்க போலீசார் பரிந்துரைப்பார்களா என்றவர் வினவினார்.
ஆக, என்ன நடக்கும் என்பது உறுதியாக தெரியாத நிலையில் தொடர்ந்து வேலைசெய்யும் ஓர் இக்கட்டான நிலையில் தாம் இருப்பதாக அவர் கூறினார்.
அவரது நிலையை உணர்ந்துள்ள சோலிடேரிடி மஹாசிஸ்வா மலேசியா (எஸ்எம்எம்), இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பல்கலைக்கழகத்துக்கு வருகை புரியும்போது அசீசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் திட்டத்தைத் தொடர்வதென முடிவுசெய்துள்ளது.
அந்த மாணவர் கூட்டமைப்பு இன்றுகாலை விடுத்த அறிக்கையொன்றில், நாட்டில் கல்விசார் சுதந்திரம் முடக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறியது.
“கண்டனக் கூட்டத்தில் அசீஸ் மீதான விசாரணையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படும்.”
மாணவர்கள் இன்றிரவு ஏழு மணிக்கு யுஐஏ நுழைவாயிலில் கூடத் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, பெர்னாமா செய்தியொன்று நஜிப்பின் உரையை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் வாசிப்பார் என்றுகூறுகிறது. இது, பிரதமர், ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களைத் தவிர்க்கப் பார்க்கிறார் என்பதைக் காட்டும் அறிகுறியாகும்.