ஜோகூரில் நீங்கள் 77 கிலோமீட்டர் நீள செனாய்-தேசாரூ பயணம் செய்திருந்தால் அந்தப் பயணம் ஏற்ற இறக்கமாக இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதற்கு என்ன காரணம் ? சாலை நிர்மாணிப்புப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்பதே அந்தக் காரணமாகும்.
அந்த நெடுஞ்சாலையின் சில பகுதிகள் குறைந்த பட்ச ஆழமான 95 மில்லி மீட்டருக்குக்கும் குறைவான ஆழத்தை கொண்டுள்ளன. 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் மீதான பகுதியில் அந்த விவரங்கள் காணப்படுகின்றன.
“நாங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டோம். அந்த நெடுஞ்சாலையில் வேலைத் தரம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதை கண்டு பிடித்தோம். சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அவை நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு ஏற்ப கட்டப்படவில்லை என்பதைக் காட்டின. ஒர் இடத்தில் 71மில்லி மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. குறைந்த பட்ச அளவு 95 மில்லி மீட்டர் ஆகும்.”
அந்த நெடுஞ்சாலையின் முதலாவது இரண்டாவது தொகுதிகளில் பல இடங்கள் ஏற்ற இறக்கமாக இருந்தன. சில பகுதிகள் திறக்கப்பட்டு ஒராண்டு மட்டுமே முடிந்துள்ள போதிலும் பள்ளங்கள் ஏற்பட்டு மோசமாக சேதமடைந்துள்ளன என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
மூன்றாவது தொகுதி 100 விழுக்காடு முடிந்து விட்ட போதிலும் அது இன்னமும் திறக்கப்படவில்லை. காரணம் அதன் நிர்மாணிப்பு வேலைகள் மன நிறைவைத் தரவில்லை.
அத்துடன் அந்தத் தொகுதி 2008ம் ஆண்டு ஜுலை 18ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் குத்தகையாளர் நிறைவேற்றவில்லை.
அவருக்கு 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையில் மூன்று நீட்டிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் கூடியதால் தலைமைக் குத்தகையாளர் நிதி நெருக்கடியை எதிர்நோக்கினார் என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஒப்படைப்பதிலும் கால தாமதமும் ஏற்பட்டது. வானிலையும் இணக்கமாக இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியது.
அந்த மூன்றாவது தொகுதியில் ஆறுகளுக்கு உயரே கட்டப்பட்ட ஐந்து பாலங்களில் மண் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை குத்தகையாளர் மேற்கொண்டிருக்க வேண்டும்.
பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் மண் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்படவில்லை என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அந்த நெடுஞ்சாலையைக் கட்டுவதற்கு முன்னர் முறையான நில அளவாய்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. அவ்வாறு செய்திருந்தால் நிலத்தை கையகப்படுத்துவதற்கான செலவுகள் 81.77 மில்லியன் ரிங்கிட் கூடியிருப்பதைத் தவிர்த்திருக்க முடியும்.
செனாய்-தேசாரூ நெடுஞ்சாலையை முடிப்பதற்கு கால தாமதமானதால் சாலைக் கட்டண வசூலிப்பில் அரசாங்கத்துக்கு 20 விழுக்காடு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த நெடுஞ்சாலைக்கான சலுகையைப் பெற்றுள்ள நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும் என அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.