ஒர் உள்நாட்டு வங்கி தனது 26 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் பெரிய இழப்பை அடைந்துள்ளது.
அந்த வங்கி 37 மில்லியன் ரிங்கிட் கடனை அங்கீகரித்த நிறுவனம் ஒன்று பின்னர் காணாமல் போய்விட்டது.
2009ம் ஆண்டு அந்தத் தொகையை வங்கி அங்கீகரித்ததாக வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
உள் விசாரணைகள் பலன் தாராமல் போகவே அந்த வங்கி போலீசில் புகார் செய்ததாக அந்த வட்டாரம் தெரிவித்தது.
“அந்த வங்கியை ஏமாற்றுவதற்கு சில தரப்புக்கள் மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டதை தொடக்கப் போலீஸ் விசாரணைகள் கண்டு பிடித்தன. அதனால் அந்தக் கடன் அங்கீகரிக்கப்படுவதில் அவை எந்தப் பிரச்னையையும் எதிர்நோக்கவில்லை”, என அந்த வட்டாரம் கூறியதாக உத்துசான் செய்தி குறிப்பிட்டது.
“கடனை பெற்றவர்கள் நம்பத்தகுந்த ஆவணங்களை காட்டியதுடன் இன்னொரு வங்கியின் உத்தரவாதக் கடிதத்தையும் வைத்திருந்தனர்.”
அந்த மோசடி உள் வேலையா என்பது குறித்து தகவல் வெளியிட அந்த வட்டாரம் மறுத்து விட்டது.
அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திn பெயரையும் அந்த ஏடு வெளியிடவில்லை. விசாரணைக்கு அல்லது சாத்தியமான நீதி மன்ற வழக்குக்கு பாதகம் ஏற்படாமல் தவிர்ப்பதே அதற்குக் காரணமாகும்.
பாஸ் போராட்டம் குறித்து கேள்வி
இதனிடையே பாஸ் கட்சியின் போராட்டம் வெற்றுக் குடம் போலாகி விட்டதாக பிரதமர் துறை துணை அமைச்சர் மாஷித்தா இப்ராஹிம் தெரிவித்ததாகவும் உத்துசான் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏனெனில் அந்த இஸ்லாமியக் கட்சி சனிக்கிழமை நிகழ்ந்த மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு தரவும் மதம் மாற்ற தடுப்புச் சட்டத்துக்கும் ஆதரவளிக்க மறுத்து விட்டதே அதற்குக் காரணம் ஆகும்.
சமயங்களுக்கு இடையிலான மன்றத்தை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த அம்பிகா ஸ்ரீனிவாசன் தலமையில் இயங்கும் பெர்சே 2.0 தேர்தல் சீர்திருத்தக் குழுவை பாஸ் ஆதரிப்பதாக அவர் சொன்னார்.
“பெர்சே சட்டவிரோதப் பேரணியை நடத்திய போது பாஸ் அதற்கு முழு ஆதரவு அளித்தது. ஆனால் இஸ்லாத்தைத் தற்காப்பதற்கான போராட்டத்தில் பாஸ் கட்சியின் நிலை என்ன?” என அவர் வினவினார்.
அவர்களுடைய பாதை தெளிவில்லாமல் இருக்கிறது. தங்களது போராட்டம் செல்லும் பாதை குறித்து அதன் தலைவர்கள் குழப்பம் அடைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.”


























