பிகேஆர் சிலாங்கூர், நெல்விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரிம110மில்லியன் இன்னும் கொடுபடாமல் இருப்பதற்காக விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமாரைச் சாடியுள்ளது.
அமைச்சு 73,291 விவசாயிகளுக்குக் கொடுத்திருக்க வேண்டிய ரிம110.67மில்லியனை இன்னும் கொடுக்கவில்லை என்று தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது.
விவசாயிகள் அவர்களின் விளைச்சலை உயர்த்த ஊக்குவிக்கும் திட்டமான அது 2007-இல் தொடங்கப்பட்டது என்று பிகேஆர் சிலாங்கூரின் தகவல் பிரிவுத்தலைவர் சுஹாய்மி ஷாபி கூறினார்.
“அதிகப்படியான விளைச்சலைக் கண்டுள்ள விவசாயிகள் இன்னமும் இந்த ஊக்கத்தொகையைப் பெறாதிருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது”, என்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஊக்கத்தொகையை நிர்வகிக்கும் பொறுப்பு பாடிபிராஸ் நேசனல் பெர்ஹாட்(பெர்னாஸ்)-இடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 2007-க்கும் 2010-க்குமிடையில் அது ரிம341.29 மில்லியன் ரிங்கிட்டை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், கணக்குத் தணிக்கையில், பெர்னாஸ் 2010 முடிய ஊக்கத்தொகையாக ரிம230.62மில்லியனை மட்டுமே வழங்கியிருப்பது தெரிய வருகிறது என்று அந்த அறிக்கை கூறிற்று. 73,291 விவசாயிகளுக்கு அவர்களுக்கான ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை.
அந்த ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், ஒரு ஹெக்டாரில் அவர்கள் விளைக்கும் ஒவ்வொரு மெட்ரிக் டன் நெல்லுக்கும் விவசாயிகள் ஒரு தொகையை(ரிம200-ரிம650)ப் பெறுவார்கள்.
‘சிறுவணிகர்களுக்குக் கொடுங்கோலர் நோ’
இன்னொரு நிலவரத்தில்,சிலாங்கூரில் தனித்துவாழும் ஒரு தாய், நோ அமைச்சில் உள்ள ஒரு துறை தன் வியாபார உரிமத்தை ரத்துச் செய்ட்வதாக அறிவிக்கை அனுப்பி வைத்துள்ளதாக புகார் செய்திருக்கிறார் என்றும் சுஹாய்மி கூறினார்.
அந்தப் புகார்தாரரும், வியாபாரப் பங்காளிகள் சிலரும் கடந்த செப்டம்பர் மாதம் ஷா ஆலமில் நோ கலந்துகொண்ட ஒரு நிகழ்வுக்குச் செல்லாமல் இருந்ததுதான் இதற்குக் காரணமாம்.
அதற்கடுத்த மாதம் அவர்களின் வியாபார உரிமம் ரத்து செய்யப்பட்டது.
“அமைச்சரின் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதற்குத் தகுந்த காரணங்களும் சொல்லப்படவில்லை.
“வியாபாரம் செய்ய அனுமதி இல்லையென்றால் அவர்களின் பிழைப்புக்கு என்ன வழி”, என்று சுஹாய்மி வினவினார்.
உரிமத்தைத் திருப்பிக் கொடுக்க அமைச்சருக்கும் அமைச்சுக்கும் அக்டோபர்30 வரை அவகாசம் அளிப்பதாகவும் அவ்வாறு செய்யத் தவறினாம் நோ, சிலாங்கூரில் சிறுவணிகர்களின் “கொடுங்கோலர்” என்பது நிரூபணமாகும் என்றும் அவர் சொன்னார்.