யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மீதான விசாரணையை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என 120க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் ஆரய்ச்சியாளர்களும் கோரியுள்ளனர். அத்துடன் அஜிஸ் பேரிக்கு முழுமையான கல்விச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ள கல்வியாளர் என்னும் முறையில் தமக்கு ஆர்வமுள்ள துறையிலும் நிபுணத்துவம் உள்ள துறையிலும் தமது சிந்தனைகளை பகிர்ந்து கொள்வது அப்துல் அஜிஸின் உரிமை மட்டுமல்ல, அவரது பொறுப்பும் கூட என்று அந்த 120 கல்வியாளர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டது.
“யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் எடுத்துள்ள நடவடிக்கையை கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என்னும் முறையில் பேராசிரியர் அஜிஸ் பேரி-யின் கல்விச் சுதந்திரத்துக்கும் பேச்சுரிமைக்கும் ஏற்பட்டுள்ள அத்துமீறல் என நாங்கள் கருதுகிறோம்.”
உண்மையில் தேசிய அக்கறைக்குரிய விஷயங்கள் மீது விருப்பு வெறுப்பின்றி நிபுணத்துவ கருத்துக்களை சொல்லக் கூடிய அவரைப் போன்ற பல அறிஞர்கள் மலேசியாவிற்குத் தேவை,” என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
அந்த அறிக்கையில் கிளைவ் கெஸ்லர், எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ், டெனிசன் ஜெயசூரியா, லிம் தெக் கீ போன்ற அறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நேற்று அகற்றப்பட்ட அஜிஸ் பேரி-யின் இடைநீக்கத்தை கண்டித்த அவர்கள் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் அந்த சட்ட நிபுணரை விசாரிப்பதை போலீஸும் 1998ம் ஆண்டுக்கான பல்லூடக தொடர்புச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதை எம்சிஎம்சி என்ற மலேசியப் பல்லூடக தொடர்பு ஆணையமும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, டமன்சாரா உத்தாமாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் மேற்கொண்ட சோதனை குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷாரபுதின் இட்ரிஸ் ஷா வெளியிட்ட ஆணை மீது அப்துல் அஜிஸ் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
சுல்தானுடைய கட்டளை “வழக்கத்துக்கு மாறானது என்றும் பொருத்தமில்லாதது” என்றும் அப்துல் அஜிஸ் கருத்துத் தெரிவித்திருந்தார்.
“ஆட்சியாளர் தமது அரசியலமைப்பு எல்லைக்கு அப்பால் செயல்பட்டிருப்பதாக பேராசிரியர் அஜிஸ் பேரி கூறியிருப்பது சட்டப்பூர்வமானதாகும். அவர் ஆட்சியாளருக்கு எதிராக வெறுப்புணர்வை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டி விட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை.”
“ஆட்சியாளர் தவறு செய்துள்ளார் என்பதை ஆக்கப்பூர்வமான முறையில் காட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தால் ஆட்சியாளர் மீதான எந்தக் குறை கூறலும் சட்டப்பூர்வமானதே என்று 1948ம் ஆண்டுக்கான தேசத் துரோகச் சட்டம் கூறுவதாக நாங்கள் கருதுகிறோம்,” என அவர்கள் அந்த கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.