இசி சந்தேகத்துக்குரிய 42,000 பெயர்களை வியாழக்கிழமை காட்சிக்கு வைக்கும்

இசி என்ற தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்குரிய 42,051 வாக்காளர்களுடைய பெயர்களை வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்குக் காட்சிக்கு வைக்கும். அந்த வாக்காளர்களுடைய பதிவுகளை உறுதி செய்ய முடியாமல் இருப்பதால் அவை காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் 987 இடங்களில் வைக்கப்படும் 2011ம் ஆண்டின் மூன்றாவது கால் பகுதிக்கான வாக்காளர் பட்டியலுடன் சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியலும் இருக்கும் என இசி இன்று விடுத்த அறிக்கை ஒன்று கூறியது.

சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கான நோக்கம் ஆட்சேபம் தெரிவிப்பதற்காக அல்ல என்றும் சம்பந்தப்பட்ட வாக்காளர்களும் அவரது நெருங்கிய உறவினர்களும் உறுதி செய்வதற்காக வைக்கப்படுகிறது என்றும் அது தெரிவித்தது.

“அந்தப் பட்டியலில் தங்களது பெயர்களை வாக்காளார்கள் கண்டு பிடித்தால் அவர்கள் அந்த விவகாரத்தை முதலில் தேசியப் பதிவுத் துறையுடன் தெளிவுபடுத்திக் கொள்வதுடன் தங்களது அடையாளப் பதிவுகளையும் சீர் செய்து கொள்ள வேண்டும். அடுத்து அவர்கள் இசி-யுடன் தொடர்பு கொள்ளலாம்.”

2011ம் ஆண்டுக்கான மூன்றாவது கால் பகுதிக்கான வேட்பாளர் பட்டியல் பற்றிக் குறிப்பிட்ட இசி, அதில் புதிய பதிவுகளுக்கான 264,404 விண்ணப்பங்களும் முகவரி மாற்றத்துக்கான 52,215 விண்ணப்பங்களும் அடங்கியுள்ளதாகத் தெரிவித்தது.

ஜுலை முதல் செப்டம்பர் வரையில் நடைபெற்ற தங்களைப் பதிந்து கொண்ட ஆனால் அந்தப் பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லாதவர்கள் பி பாரத்தை பூர்த்தி செய்து அந்தப் பட்டியல் காட்சிக்கு வைக்கப்பட்டதிலிருந்து ஏழு நாட்களுக்குள் மாநில இசி அலுவலகங்களுக்கு அதனை அனுப்பி வைக்க வேண்டும்.

அந்த வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் மீது ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவோர், சி பாரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். என்றாலும் ஆட்சேபிக்க வேண்டும் என்பதற்காக ஆட்சேபிக்கக் கூடாது என்றும் செல்லத்தக்க காரணங்கள் அதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை பொது மக்களுக்கு நினைவூட்டியது.

பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களுடைய பெயர்களையும் இசி அப்போது காட்சிக்கு வைக்கும். இவ்வாண்டு ஜுலை மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் காலமான 69,293 பேர்களின் பெயர்களையும் குடியுரிமையைத் தொடர்ந்து வைத்திருக்காத 1,068 பேர்களின் பெயர்களையும் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

பெர்னாமா