பயனீட்டாளர் பொருட்களின் விலைகள் குறிப்பாக கோழி விலை ஏற்றம் கண்டிருப்பது மீது அடுத்த மாதம் தொடக்கம் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள 1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் கியூபாக்ஸ் எனப்படும் பொது, சிவில் சேவை ஊழியர் சங்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
நியாயமற்ற விலைகளில் பொருட்களை விற்கின்ற பொறுப்பற்ற வணிகர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் கடைகளுக்குப் பொருள் வாங்கச் செல்வதைக் குறைத்துக் கொள்வதின் மூலமும் மாற்றாகக் கிடைக்கக் கூடிய பொருட்களைத் தேடுவதின் மூலமும் அவர்கள் அதனைச் செய்ய முடியும் என கியூபாக்ஸ் தலைவர் ஒமார் ஒஸ்மான் கூறினார்.
“புதிதாக அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, போனஸ் ஆகியவற்றைக் கூட அரசு ஊழியர்கள் இன்னும் அனுபவிக்கவில்லை. ஆனால் வணிகர்கள் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டனர்”, என அவர் கூச்சிங்கில் கூறினார்.
அவர் நடப்பு விவகாரங்கள் மீது அரசாங்கத் துறைகளின் தலைவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் விளக்கமளித்தார்.
அரசு ஊழியர்கள் ஒன்றுபட்டு பயனீட்டாளர் என்னும் முறையில் தங்களது தங்களுடைய உரிமைகளைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஒமார் மேலும் குறிப்பிட்டார்.
பயனீட்டாளர் பொருட்களின் விலைகள் குறிப்பாக கோழி விலை ஏற்றம் நாடு முழுவதும் காணப்படுகிறது. அதனால் சரவாக்கில் உள்ளவர்கள் உட்பட அனைத்துப் பயனீட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமாருக்கு முன்னதாகப் பேசிய சரவாக் மாநில உள் நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரத் துறை இயக்குநர் வான் அகமட் உஸிர் வான் சுலைமான், கடந்த மாதம் கோழி விநியோகம் குறைந்ததைத் தொடர்ந்து அதன் விலை ஒரு கிலோகிராமுக்கு 9 ரிங்கிட் 50 சென்னுக்கும் 11ரிங்கிட் 50 சென்னுக்கும் இடையில் உயர்ந்ததாக கூறினார்.
அடுத்த 45 நாட்களில் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் போது அதன் விலை ஒரு கிலோகிராமுக்கு 7 ரிங்கிட் 50 சென்னுக்கும் 8 ரிங்கிட்டுக்கும் இடையில் குறையும் என என வான் அகமட் எதிர்பார்க்கிறார்.
பெர்னாமா