வணக்கம். இவ்வினிய வேளையில் எல்லா மலேசியர்களுக்கும் குறிப்பாக இந்துகளுக்கு எனது தீபாவளி வாழ்த்துகளை கூறுவதில் மகிழ்ச்சி.
இந்துகளுக்கு தீபாவளி ஒரு முக்கிய பண்டிகையாகும். ஒளியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது தீபாவளி.
இருள் எனும் அதர்மத்தை ஒழித்து, ஒளி எனும் தர்மத்தை மனிதர்களின் வாழ்வில் மலரச்செய்யும் நீதியைக் குறிக்க வல்லதாக இருப்பதே அதன் சிறப்பு.
நமது வரலாறு பல இன, மதக் கலாச்சாரத்தைக் கொண்டது. அதனால் எல்லா மக்களின் சமய நம்பிக்கைகளுக்கும் நமது அரசியல் சாசனத்தில் இடமுண்டு. இம்மாநிலத்தின் 53 லட்சம் மக்களில் 16 விழுக்காட்டினர் இந்தியர்கள். அவர்களில் பெரும்பாலும் இந்துகளாவர்.
இந்நாட்டின் சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதுதான். மொழியால், சமயத்தால், நிறத்தால், சிந்தனையால் நாம் வேறுப்பட்டாலும் மலேசியர்கள் என்ற இனத்தால் ஒன்று படுகிறோம்.
நீதி, நியாயத்தின் படி நடந்து சமதர்மத்துக்கு பாடுப்பட்டு நாட்டில் அமைதியை வளர்த்து சுபிட்சத்தை மேலோங்க செய்வோம்.
இந்தக் கொள்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிலாங்கூர் மாநில அரசு மக்களின் பல வித பிரச்சனைகளுக்கும் தீர்வுக்காண பாடுபட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் ஆலயங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் மானிய மற்றும் நில விவகாரங்களுக்கு தீர்வுக்கணுவதில் மட்டுமின்றி மக்கள் வாழ்வுக்கு ஏற்றம் தரும் எல்லா விவகாரங்களிலும் உதவுவதில் இம்மாநில அரசு நாட்டுக்கே முன்னோடியாக விளங்கிவருகிறது.
இவ்வாண்டு தீபாவளியை இந்து மக்களுடன் கொண்டாட கிள்ளான் லிட்டில் இந்தியாவுக்கும், நவம்பர் 7ந் தேதி ரவாங்கில் நடைபெறும் சிலாங்கூர் மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கும் வருகிறேன்.
தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ள மக்கள் அனைவரும் திரண்டு வரவேண்டிக் கேட்டு கொள்கிறேன்.
நாட்டு மக்கள் ஆண்டுக்கு ஒரு முறையல்ல, ஆண்டு முழுவதும் குதூகலமாக வாழ நாட்டில் வளமுண்டு. அது மக்கள் வாழ்வுக்கு ஏற்றம் தரவேண்டும். நாட்டின் வளம் மக்களுக்கே.
ஒளிரட்டும் மலேசியா. எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! நன்றி.