“மனித உரிமைகள் அலை”, எச்சரிக்கிறார் போலீஸ் படை முன்னாள் தலைவர் ரஹிம் நோர்

“மனித உரிமைகள் அலை”யின் வருகை இந்த நாட்டை தோற்றுவித்த கொள்கைகளுக்கு மிரட்டலாக அமையும் என்று போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அப்துல் ரஹிம் முகமட் நோர் இன்று கூறினார்.

இந்த அலையை ஒரு புதிய சமயம் என்று வர்ணித்த அவர், இது சுதந்திரத்தின் போது பல்வேறு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களுக்கு மிரட்டலாக அமைவதோடு அவற்றை சிதைத்து விடும் என்றாரவர்.

“நான் இந்த சமயத்திற்கு உடன்பட்டால், நான் ஏன் அரச குடும்பமாக முடியாது என்று கேட்பேன். பூமிபுத்ராக்களின் தகுதி சம்பந்தப்பட்டவை என்றால் கேட்க வேண்டுமா?”

பத்து ஆண்டுகளுக்கு முன்பு துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம்மை தாக்கியதற்காக இரண்டு மாத கால சிறை தண்டணை அனுபவித்தற்குப் பின்னர் மிக அபூர்வமாக தோன்றிய ஒரு பொதுக்கூட்டத்தில் ரஹிம் இக்கருத்தைக் கூறினார்.

கோலாலம்பூரில் இன்று காலையில் பெர்காசா அமைப்பின் இரண்டாம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய அந்த முன்னாள் போலீஸ் தலைவர் இந்த “மனித உரிமைகள் அலை”க்கு எதிராக மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்றார்.

“நான் இதனை ஒரு பெர்காசா உறுப்பினராக கூறவில்லை – நீங்கள் உறுப்பினர்களின் எண்களைச் சோதிக்கலாம். நான் அந்த அமைப்பின் ஓர் அங்கம் அல்ல, நான் அம்னோ உறுப்பினர்கூட இல்லை.”

இந்தப் புதிய அலை 1930 மற்றும் 1940களில் சீனர்களின் ஆதிக்கத்தில் இருந்த “கம்யூனிஸ்ட் அலை” போன்றது என்றாரவர்.

ஒரு மக்கள் ஜனநாயக மலாயாவை உருவாக்குவதற்கு கம்யூனிஸ்ட்கள் இடதுசாரி மலாய்க்காரர்களுடன் ஒரு “துணிகர நடவடிக்கையை” மேற்கொள்ள முயற்சித்தனர் என்று ரஹிம் கூறினார்.

“மலாய் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட்களின் கையாட்கள்”

முகம்மட் இந்த்ரா ஒரு சுதந்திரப் போராட்டவாதி என்று கூறிய பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் சாபுவை குறிவைத்த அவர், பார்ட்டி கெபங்சாஆன் மிலாயு மலாயா (பிகேஎம்எம்) போன்ற மலாய் இடதுசாரி அமைப்பு சீனர்களின் ஆதிக்கத்தில் இருந்த மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கைப்பாவை என்று ரஹிம் கூறினார்.

“பிகேஎம்எம்முக்கு சிபிஎம் நிதி வழங்கியது…சிபிஎம் அதன் தலைமையகத்தை முதலில் ஈப்போவில் அமைத்தபோது பிகேஎம்எம்மும் அதன் தலைமையகத்தை அங்கு தோற்றுவித்தது. சிபிஎம் கோலாலம்பூருக்கு மாறியதுபோது, பிகேஎம்எம்மும் அதன் அலுவலகத்தை அங்கு அமைக்கும்படி உத்தரவிடப்பட்டது.”

ஜப்பானியர்கள் சரண்டைந்தபோது, பிந்தாங் தீகா மற்றும் அனைத்து மலாயா மக்கள் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் (எம்பாஜா) மலாய்க்காரர்களை மே 13 கலவரத்தில் நடந்ததைவிட பெரிய அளவில் கொன்றது என்று மேலும் கூறினார்.

இதுவும் மலாயன் யூனியனும் சீனர்களின் ஆதிக்கத்திலிருந்த சிபிஎம் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மலாய்க்காரர்களுக்கு உணர்த்தியது என்றாரவர்.

“இந்தச் சூழ்நிலையில்தான் மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்த அம்னோ தோற்றுவிக்கப்பட்டது”, என்று அவர் கூறினார்.

“மனித உரிமை அலை”யை எதிர்கொள்வதற்கு மலாய்க்காரர்கள் “கம்யூனிஸ்ட் அலை”யின்போது இருந்ததுபோல் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்று ரஹிம் வலியுறுத்தினார்.