“ஜுலை 9 பேரணியில் தாம் கலந்து கொள்ளாதது மனோதத்துவப் போரின் ஒரு பகுதி” என்கிறார் இப்ராஹிம் அலி

ஜுலை 9 பேரணியில் தாம் கலந்து கொள்ளாததை,  பெர்சே 2.0 அமைப்புக்கு எதிராக தாம் நடத்திய மனோதத்துவப் போரின் ஒரு பகுதி என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி நியாயப்படுத்தியுள்ளார்.

“தலைமைத்துவம் ஒரு முடிவைச் செய்யும் போது நீங்கள் அது குறித்து நிறைய கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியமில்லை.  சில விஷயங்களை நாங்கள் சொல்லலாம். சில விஷயங்களைச் சொல்லக் கூடாது. இது மனோதத்துவப் போரின் ஒரு பகுதி என்பதால் நான் அனைத்தையும் சொல்ல வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.”

பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ளப் போவதாக பல முறை சூளுரைத்த போதிலும் பெர்க்காசா தலைவர் அந்த பேரணியில் கலந்து கொள்ளத் தவறியது ஏன் என்று அந்த அமைப்பின் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கோலாலம்பூர் பேராளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இப்ராஹிம் பதில் அளித்தார்.

பெர்சே ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக பல போலீஸ் புகார்களைக் கொடுத்ததின் வழி மனோதத்துவப் போரை பெர்க்காசா தொடங்கியதாக அவர் விளக்கினார். அதனைத் தொடர்ந்து போட்டி பேரணி நடத்தப்படும் என கடுமையான மருட்டல்கள் விடுக்கப்பட்டன என்றார் அவர்.

என்றாலும்  லண்டன் கலவரங்களை மேற்கோள் காட்டி அன்றைய தினம் சூழ்நிலை வன்முறையாக மாறக் கூடும் என தமக்கு அறிவுரை கூறிய போலீசார், வீட்டிலேயே இருக்குமாறு தம்மைக் கேட்டுக் கொண்டதாக இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்தப் பேரணியில் பங்கு கொண்டவர்களில் பெரும்பாலோர் “கிளந்தான், கெடாவைச் சார்ந்த மலாய் சமயவாதிகள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் அவர்களை எதிர் கொண்டிருந்தால் அது மலாய்க்காரர்களுக்கு எதிராக மலாய்க்காரர்கள் என்னும் சூழ்நிலை உருவாகியிருக்கும். ஆகவே பேரணிக்குப் போக வேண்டாம் என்ற முடிவு சரியான முடிவாகும்.”

“நான் அச்சமடைந்து விட்டதாகச் சிலர் சொல்கின்றனர். ஆனால் நான் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் தங்களுக்குள் மோதிக் கொள்வதைக் காண நான் விரும்பவில்லை,” என இப்ராஹிம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நிறைவு செய்து வைத்த போது கூறினார்.

TAGS: