இந்த நாட்டில் மதம் மாற்றம் நிகழ்வதைத் தடுப்பதற்கு இஸ்லாம் அல்லாத சமயங்களின் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவது மீதான சட்டத்தை அமலாக்குவது கடுமையாக்கப்பட வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் ஜமில் பாஹாரோம் கூறுகிறார்.
அத்தகைய சட்டம் 1980ம் ஆண்டு இயற்றப்பட்ட பின்னர் அதனை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள் அந்தச் சட்ட அமலாக்கத்தை முறையாக மேற்கொள்ளவில்லை என அவர் சொன்னார்.
“அத்தகைய சட்டத்தை இயற்றுவதற்கு அனுமதித்து விட்டு அதன் அமலாக்கத்தை பின்னர் புறக்கணிப்பதற்குப் பதில் அந்தச் சட்டத்தை அதன் உண்மையான அர்த்தத்தில் அமலாக்குவதே முக்கியமாகும்,” என அவர் கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
செராஸில் பண்டார் ஸ்ரீ பெர்மைசுரியில் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்றத்தின் சமய இடைநிலைப் பள்ளிக்கூடம் கட்டப்படவிருக்கும் இடத்தைப் பார்வையிட்ட பின்னர் ஜமில் பாஹாரோம் அவ்வாறு கூறினார்.
திரங்கானு, கிளந்தான், சிலாங்கூர், மலாக்கா, கெடா, பாகாங், ஜோகூர், நெகிரி செம்பிலான், பெர்லிஸ் ஆகியவை அந்தச் சட்டத்தை அமலாக்கியுள்ளன.
பெர்னாமா