மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அரசாங்க அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டதுதான் தலைமைக் கணக்காயரின் அறிக்கை நாடாமன்றத்தில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதற்குக் காரணம் என்று சட்டப் பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார்.
மகாதிர் அரசமைப்புச் சட்டத்தை 1993 ஆம் ஆண்டில் திருத்தி ஆட்சியாளர்களின் சிறப்புரிமைகளைப் பறித்து பேரரசருக்கு “உத்தரவிடும்” அரசாங்கம் அமைய வழிவகுத்தார் என்று அசிஸ் பாரி கூறினார்.
பேரரசர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்ற சட்டவிதியை அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 40 (1A) ஐ புகுத்தியதின் வழி அது செய்யப்பட்டது.
“ஊமையான முடியாட்சிக்கு முன்னுரிமை அளித்த மகாதிர் நிருவாகம் விட்டுச் சென்ற முக்கியமான பண்பு இதுதான்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
“அதே வேளையில் சீரான நிலைப்பாடு குறித்த ஈடுபாடு அற்ற ஆட்சிமன்றத்தையும் அதன் பணியின் கடமை என்ன என்பதில் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் முடியாட்சியையும் நாம் கொண்டிருக்கிறோம்”, என்று அவர் மேலும் கூறினார்.
ஏஜியின் கணக்காய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் இதற்கு முன்பு நடந்திராத தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
பேரரசிடம் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு அது அமைச்சரவையிடம் கொடுக்கப்பட வேண்டியிருந்ததால் இத்தாமதம் ஏற்பட்டதாக பின்னர் கூறப்பட்டதோடு நஜிப்பின் 2012 வரவுசெலவு அறிக்கையை ஏஜியின் கணக்காய்வு அறிக்கை பாழாக்கி விடும் என்ற திகிலும் இருந்தது.
கணக்காய்வரின் அறிக்கையை பேரரசரிடம் தாக்கல் செய்வதற்கு முன்பு அமைச்சரவையிடம் கொடுக்கும் வழக்கம் 1982 ஆண்டில் மகாதிர் பிரதமார பின்னர் தொடங்கியது ஏஜி அம்பிரின் புவாங் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பணியாளர் நியமனம் கூடாது
கணக்காய்வர் அறிக்கையில் அமைச்சரவை சம்பந்தப்படக்கூடாது என்று சுட்டிக் காட்டிய அசிஸ் பாரி, அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நேரடியாக பேரரசரிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றாரவர்.
ஏஜியின் அறிக்கையை பேரரசரிடம் அளிப்பது ஒரு “வழி முறைதான்” என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அது முக்கியம் என்றார். அது கணக்காய்வரின் கரத்தை வலுப்படுத்துகிறது ஏனென்றால் மகாதிரின் சமசீரான நிலையைச் சிதைக்கும் நடவடிக்கைக்கு முடியாட்சிதான் “கடைசி தற்காப்பு” ஆகும் என்றாரவர்.